ஜப்பானை நெருங்கும் சக்திவாய்ந்த புயல்: வெள்ளம், நிலச்சரிவு எச்சரிக்கை
ஜப்பானின் கிழக்குக் கடற்கரையை சக்திவாய்ந்த டுஜுவான் புயல் திங்கள்கிழமை நெருங்கியதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்ற அறிவுறுத்தல்களின் கீழ் உள்ளனர். நூற்றுக்கணக்கான விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA), இசு தீவுகளுக்கு 5-ஆம் நிலை அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது அந்த அமைப்பின் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையாகும். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டுஜுவான் புயல் திங்கள்கிழமை பிற்பகுதியில் டோக்கியோ பெருநகரப் பகுதிக்கு அருகே கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது, டோக்கியோவின் தொலைதூரத் தீவுகளில் ஒன்றான ஹச்சிஜோஜிமாவிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் புயல் நிலைகொண்டிருந்ததுடன், மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டது.
டோக்கியோவுக்கு அருகிலுள்ள இசு தீவுகள் மற்றும் சிபா மாகாணத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே வார இறுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என JMA எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வரை பெய்யக்கூடிய மொத்த மழையின் அளவு, செப்டம்பர் மாதத்தின் சராசரி மாதாந்திர மழைப்பொழிவை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சில பகுதிகளில் சாதனை அளவிலான கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய ஜப்பான் மற்றும் டோக்கியோ உள்ளிட்ட காண்டோ பிராந்தியத்தில் நேர்கோட்டுப் மழைப் பட்டைகள் உருவாகக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இவை குறுகிய பகுதிகளில் பல மணி நேரம் தொடர்ந்து கனமழையை ஏற்படுத்துவதால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும்.
சிபா மாகாணத்தில் 4,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் ஐச்சி மாகாணத்தில் குதிரையேற்றப் போட்டி ஒன்று செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய வீடியோ கேம் வர்த்தகக் கண்காட்சிகளில் ஒன்றான டோக்கியோ கேம் ஷோ, புயல் காரணமாக அதன் இறுதி நாளுக்கு முன்னதாகவே மூடப்பட்டது.
ஜப்பானில் சமீபத்தில் தொடங்கியுள்ள ‘சில்வர் வீக்’ விடுமுறைக் காலத்திலும் டுஜுவான் புயல் பயணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கள்கிழமை, ஜப்பான் ஏர்லைன்ஸ் 120 உள்நாட்டு மற்றும் 15 சர்வதேச விமானங்களையும், ஆல் நிப்பான் ஏர்வேஸ் 140 உள்நாட்டு விமானங்களையும் ரத்து செய்தன. டோக்கியோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையில், கனகாவா மாகாணத்தின் கமாகுரா நகரில் டுஜுவான் புயல் நெருங்கியதால், கடற்கரையை பலத்த அலைகள் தாக்கின.

Post a Comment