யாழில். பிளாஸ்ரிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு
யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல வலுப்படுத்தும் நோக்கில், Save a Life அமைப்பு, Ceylon Cold Stores மற்றும் Viridis Recyclers ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட “Jaffna Recycling Hub” இன்றைய தினம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ்ப்பாணம் செம்மணி, அரியாலையில் அமைந்துள்ள மறுசுழற்சி மையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாவட்ட செயலர், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை முற்றாகத் தடுப்பது சவாலானதாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால், அவற்றின் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகச் சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது நடைமுறைக்கு ஏற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நடவடிக்கையாகும்
இந்த மறுசுழற்சி மையத்தின் ஊடாக பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் நேரடியாக சுமார் 10 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது. சேகரிக்கப்பட்ட கழிவுகள் அடுத்தடுத்த கட்டங்களில் பதப்படுத்தப்பட்டு புதிய பொருட்களாக மாற்றப்படுவதன் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றாகத் தடுக்க முடியாத நிலையிலும், அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை கணிசமாகக் குறைக்க முடியும். மாவட்டத்திலும் நாட்டிலும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு இத்தகைய முயற்சிகள் சிறந்த வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.
பொதுமக்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இந்த மையத்தில் ஒப்படைக்க முடியும். ஒப்படைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் வகை மற்றும் எடைக்கு ஏற்ப ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைக்க விரும்புவோர் யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை, இலக்கம் 37, இளையதம்பி ஒழுங்கையில் அமைந்துள்ள மையத்தில் ஒப்படைக்க முடியும் என்பதுடன், 077 228 4939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் முடியும்.
இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, Save a Life அமைப்பின் பணிப்பாளர் ராகுலன் கந்தசாமி, மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், Ceylon Cold Stores நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் தில்ஷானி எதிரிசிங்க, நுகர்வோர் மற்றும் வெளிப்புற ஈடுபாட்டு முகாமையாளர் பிரேமலால் பெரேரா, திட்டத் தலைவர் – வெளிப்புற சுற்றுச்சூழல் விவகாரங்கள் துமிந்து பெரேரா, Viridis Recyclers நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புத்திக முத்துகுமாரண உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
.jpg)
Post a Comment