நாட்டுக்காக உழைத்தோம் - விளைவுகளைச் சந்திக்கிறோம்!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி, 2019 ஆம் ஆண்டு தமக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பைத் தொடர்ந்து, தாம் தப்பிச் செல்லப் போவதில்லை என்றும், நீதிமன்றத்தில் சரணடைந்து சட்டத்திற்குக் கீழ்ப்படிவதாகவும் தெரிவித்துள்ளாhர். நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஞானசார தேரர், உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தாம் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். "பலவீனமானவர்களே தலைமறைவாகி தப்பிச் செல்வார்கள். நாங்கள் நாட்டுக்காக உழைத்தோம், அதற்கான விளைவுகளைச் சந்திக்கிறோம். நாங்கள் பயப்படவில்லை, தப்பியோடவும் மாட்டோம்" என்று அவர் கூறினார். தான் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், நீதிமன்றத்திலும் சட்டத்தின் முன்னும் சரணடையவுள்ளதாகவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
இதனிடையே இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விசாரணைகளின் பின்னர், குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலேயே கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment