வேட்டையில் தப்பித்தாரா சிராந்தி?



ராஜபக்ச குடும்பத்தினர் மீதான கைது வேட்டை தொடரும் நிலையில் மகிந்த ராஜபக்சவின் மனைவியும் முன்னாள் முதலாவது பெண்மணியுமான சிராந்தி ராஜபக்ச, இலங்கையை விட்டு தப்பித்துச்சென்றுள்ளார்.

இதனிடையே நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் அழைப்பாணையைப் பெற்றிருந்த நிலையிலும் நாட்டை விட்டு சிராந்தி வெளியேறியதாக வெளியாகியுள்ள செய்திகளை ராஜபக்ச குடும்பம் மறுதலித்துள்ளது.

சிராந்தி ராஜபக்சவுக்கு இலங்கையில் இருந்து புறப்படுவதற்கு முன்னர் எந்தவொரு அழைப்பாணையும் வழங்கப்படவில்லையென குடும்பம் தெரிவித்துள்ளது.

அவர் தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றதாகவும், புறப்படவிருந்த விமானத்திற்காக காத்திருந்தபோது, விமான நிலைய அதிகாரி ஒருவர் புறப்பாட்டு வாயில் அருகே அழைப்பாணை கடிதத்தை திடீரென வழங்கியதாகவும்; தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சிராந்தி ராஜபக்ச செப்டெம்பர் 16 அதிகாலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவித்திருந்தன.

எனினும் அவர் செப்டெம்பர் 24ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராக வேண்டியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே சிறீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணமோசடி தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபகசவை செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  


No comments