ரணிலின் காய்நகர்த்தலை சாதுரியமாக முறியடிக்க சஜித் முன்னெடுத்துள்ள ஐக்கிய முன்னணி பேரணி! பனங்காட்டான்


நாமல் ராஜபக்சவின் கைது விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க காட்டும் அக்கறையை திசை திருப்பி, 22ம் அரசியல் திருத்தத்தை எதிர்ப்பதற்காக பொது எதிரணி ஒன்றை ஐக்கிய தேசிய கட்சியையும் இணைத்து, ஐக்கிய முன்னணி என்ற பெயரில் எதிர்வரும் 24ம் திகதி பேரணி ஒன்றை நடத்த சஜித் பிரேமதாச எடுக்கும் முயற்சி எந்தளவுக்கு வெற்றிபெறும் என்பது ரணிலின் நிலைப்பாட்டிலேயே தங்கியுள்ளது.

பல்வேறு அரசியல் செயற்பாடுகளைச் சந்திக்கும்போது இரட்டைக்குழல் துப்பாக்கி என்ற சொற்பதம் பாவிக்கப்படுவது வழக்கம். இவ்வாறான ஒரு நிலைமை இப்போது இலங்கையில் ஆட்சி புரியும் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது வெளிச்சமாகத் தெரிகிறது. 

ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வேகமான சட்ட நடவடிக்கைகளும், 22ம் அரசியல் திட்டத்தை சகல தடைகளையும் தாண்டி நிறைவேற்ற முன்னெடுக்கப்படும் முயற்சிகளுமே அநுர அரசுக்கு இரட்டைக்குழல் துப்பாக்கியாகியுள்ளது. 

கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் காலங்களில் அநுரவின் தேசிய மக்கள் சக்தி ஊழல் ஒழிப்பையே தங்களின் பிரதான அம்சமாக மேடைகளிலும் ஊடகங்களிலும் கூறிவந்தது. இதனைக் கூறியே மக்களிடம் வாக்கு கேட்கப்பட்டது. 78 ஆண்டுகளாக ஏமாற்று அரசியல் நடத்தி வந்த பிரதான கட்சிகளில் வெறுப்படைந்திருந்த மக்கள் தங்கள் வாக்குப்பலத்தை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி அதனை கதிரையேற்றினர். 

ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டு நிறைவுறும் காலத்தில் ஊழல் ஒழிப்பு என்றால் என்னவென்று அர்த்தப்படும் செயற்பாடுகளில் ஆட்சியாளர்கள் இறங்கினர். ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன மற்றும் இவர்களுடன் சேர்ந்து இயங்கிய சொரியல்கள் என்ற பாகுபாடின்றி ஊழல் புரிந்த அரசியல்வாதிகளும் அவர்களின் ஏஜன்டுகளும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் பலர் இந்த வலைக்குள் வரவிருப்பதாக சொல்லப்படுகிறது. 

அடுத்த ஜனாதிபதி என்று பொதுஜன பெரமுனவினால் அழைக்கப்படும் நாமல் ராஜபக்சவினதும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளும் தங்கள் இளவரசருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் என அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக குற்றஞ்சாட்டி வருகின்றனர். நாமலின் தாயார், இளைய சகோதரர் மற்றும் உறவினர்கள் என பலர் நீதிமன்ற படிகளில் ஏறி இறங்கி வருகின்றனர். ராஜபக்சக்களின் பின்கதவால் ஜனாதிபதியாகி அவர்களை காப்பாற்றி வந்த ரணில் விக்கிரமசிங்க இப்போது நாமல் மீது அக்கறை காட்டி அவருக்காக அறிக்கைகள் விடுவது ரகசியமான ஒன்றல்ல. 

நாமலுக்காக ரணில் உரத்துக் குரல் கொடுப்பது சஜித் பிரேமதாசவை அதனூடாக அரசியலிலிருந்து ஓரங்கட்டும் மறைமுக செயற்பாடு என்று கடந்த வாரம் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். இதனையே ஐக்கிய மக்கள் சக்தியின் புள்ளிகளும் சஜித்துக்கு தெரிவித்துள்ளனர். இதனைப் புரிந்து கொண்டுள்ள சஜித் கிளித்தட்டு அரசியலை ஆரம்பித்துள்ளது வெளிப்படையாகப் புலப்படுகிறது. எதிர்க்கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் பொதுக்கூட்டில் இணைத்துக் கொண்டு தனது பயணத்தை வேறு திசையில் ஆரம்பித்துள்ளார். 

இதன் முதல் முன்னெடுப்பாக பொது எதிரியை களத்தில் சந்திப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட போவதாக ஓர் அறிக்கையை விடுத்துள்ளார். ளுயதiவா யnழெரnஉநள hளை ளுதுடீ – ருNP  யடடயைnஉந வழ அழரவெ ரnவைநன கசழவெ யபயiளெவ சரடiபெ பழஎநசnஅநவெ என்று கடந்த 17ம் திகதி பல ஆங்கிலப் பத்திரிகைகள் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தன. 

22ம் அரசியல் திருத்தத்தை எதிர்ப்பதற்காக பெருமளவிலான நடவடிக்கைக்காக ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொது ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கவும் தாம் முன்வந்துள்ளதாக சஜித் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் இது சம்பந்தமாக ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இரண்டு கட்சிகளும் முழுமையாக இணையாமல் குறிப்பிட்ட ஒரு பொது நோக்கத்துக்காக – அநுர அரசின் 22ம் அரசியல் திருத்தத்தை இணைப்பதற்கு மட்டுமே இந்த முன்னணியை அமைப்பது என்பது இதன் அர்த்தம் என்று அனைத்துக் கட்சிகளுக்கும் தெரியும். 

தற்காலிகமோ அல்லது நிரந்தரமோ இந்த இணைப்பு என்பதற்கு அப்பால் இதன் சாத்தியம் பற்றி நோக்குவதாயின் 1970களிலிருந்து இன்றுவரை இடம்பெற்று வரும் இருதரப்பினதும் முக்கிய விடயங்களை நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். 1973ல் டட்லி சேனநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோது அவருடன் நேரடியாக மோதி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தவர் அவ்வேளை அக்கட்சியின் எம்.பியாகவிருந்த சஜித்தின் தந்தை ரணசிங்க பிரேமதாச. 1965ல் உருவான தேசிய அரசாங்கத்தில் அதன் பிரதமராகவிருந்த டட்லி சேனநாயக்கவினால் முதன்முதலாக ஓர் உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டவர் பிரேமதாச. அந்த ஆட்சியில் உள்;ராட்சி அமைச்சராகவிருந்த  எம்.திருச்செல்வம் அப்பதவியை துறந்ததையடுத்து உள்;ராட்சி அமைச்சராக டட்லி சேனநாயக்கவினால் நியமிக்கப்பட்டவரும்  பிரேமதாசவே. 

டட்லியின் மரணத்துக்குப் பின்னர் அவரை தம்பக்கம் இணைத்துக் கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகி 1977 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்து 1978ல் தம்மை ஜனாதிபதியாக்கியதும், பிரதமராக பிரேமதாசவை நியமித்து அவரை எதிரியாக்காது பார்த்துக் கொண்டார். 1989ல் பிரேமதாச ஜனாதிபதியானபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பெறாமகனான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு சகல கட்சியினரிடமும் இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. தமக்கு எப்போதும் றப்பர் ஸ்டாம்பாக இருக்கக்கூடியவரான தபால் அமைச்சராகவிருந்த டிங்கிரி பண்டா விஜேதுங்கவை பிரதமராக அவர் நியமித்தார். இலங்கை அரசியலில் சப்பாணி என பெயர் பெற்றவர்  விஜேதுங்க. இவரே முதன்முதலாக தமது ஆட்சியில் ரணிலை பிரதமராக நியமித்தவர்.

பிரேமதாச – ரணில் இணக்கமின்மை பிரேமதாசவின் மரணத்துக்குப் பின்னரும் குடும்ப ரீதியாக விரிவடைந்து வந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியை 1994ல் பெற்றுக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க கடந்த 34 வருடங்களாக கட்சியை ஒரு குடும்பமாக கணித்து தம்முடனேயே வைத்துக் கொண்டிருக்கிறார். துணைத்தலைவர் பதவியை சஜித் பல தடவை எதிர்பார்த்தாராயினும் ரணில் அதனை வழங்கவில்லை. மாறாக, தமது தாய்மாமன் மகனான றுவான் விஜேவர்த்தனவுக்கு அப்பதவி வழங்கி தமக்குப் பின் அவரே கட்சியின் தலைவர் என்னும் எழுதாத நியமனத்தை ரணில் வழங்கியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து சஜித் பிரேமதாச பிரிந்து சென்ற தம்முடன் வந்தவர்களையும் இணைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியதற்கு இதுவும் ஒரு காரணம். 

இவ்விடத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய பொதுவான ஒரு விடயம் உண்டு. ரணிலும் சஜித்தும் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. ராஜபக்ச குடும்பம் இலங்கையில் ஆட்சியை கைப்பற்றத் தொடங்கிய பின்னர் இவர்களது கட்சிகள் எந்தவொரு நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. விசேடமாகக் கவனிக்கப்பட வேண்டியது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியென பெயர் பெற்றிருந்தாலும் இப்போது அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. 

பல தடவை சஜித் அணியை ஐக்கிய தேசிய கட்சியுடன் மீளஇணைக்க ரணில் முயற்சித்தாராயினும் அதன் தலைமைப்பதவியை அவர் தம்முடனேயே வைத்திருக்க விரும்பியதால் சஜித் தனது கட்சியினருடன் தனித்து இயங்கவே விரும்பினார். இப்போதுள்ள நிலைமையில் சஜித்திலும் பார்க்க நாடாளுமன்ற பலத்தில் ரணில் பின்தங்கியவராகவே உள்ளார். எனினும், கட்சித் தலைமை பதவியை எவருக்கும் விட்டுக்கொடுக்க ரணில் தயாரில்லை. இதுவே இரண்டு கட்சிகளும் தொடர்ந்து தனித்தனியாக இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணம். 

ஆனால் இப்போது நீதிபதிகளின் வயதெல்லையை அதிகரிக்கும் 22வது அரசியல் திருத்தத்தை அனைத்து எதிர்க்கட்சிகளுமே எதிர்ப்பதால், அவைகளை இணைத்துக் கொண்டு அதற்குத் தலைமை தாங்கி இலங்கை அரசியலில் தமக்கான ஓர் இடத்தை நிலைநாட்ட இதுவே சரியான தருணமென நினைக்கும் சஜித் இரண்டு மாங்காய்களை ஒரே கல்லில் விழுத்த முயற்சிக்கிறார். 

நாமல் ராஜபக்சவின் கைது, பிணை வழங்காமை, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் வழக்கு ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது ஒருபுறம் தள்ளுவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளதும் ஒத்துழைப்போடு எடுக்கப்படும் 22ம் திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குவது தமது எதிர்கால அரசியலுக்கு பலமாக அமையுமென சஜித் நம்புகிறார். இதற்கென உருவாக்க அவர் முன்வந்துள்ள பொது ஐக்கிய முன்னணியில் ரணில் இணையத் தவறினால் அவரது எதிர்கால அரசியல் செயற்பாட்டுக்கு அவரே குழி வெட்டியவராக மாறவேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் சஜித் முழுமையாகக் கருதுகிறார். இதற்காகவே பொது ஐக்கிய கூட்டணியின் தலைமையை தாமே எடுத்து அதில் ரணில் உட்பட அனைவரையும் இணைத்துக்கொண்டு பயணிக்க சஜித் முன்வந்துள்ளார். 

இந்த மாதம் 24ம் திகதி கொழும்பில் நடத்த முன்னறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள ஆட்சிக்கு எதிரான எதிரணிகளின் பேரணி கடந்த வாரம் அநுராதபுரத்தில் இடம்பெற்ற மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவின் பேரணியை மேவிச் செல்லுமா? அல்லது சஜித்தின் தலைமைத்துவத்துக்கு இது சோதனையாக அமையுமா? ரணில் எடுக்கும் முடிவில்தான் அதுவா இதுவா என்பது தெரியவரும். 

No comments