மேற்குக் கரை இஸ்ரேலியக் குடியேற்றங்களுக்காக வர்த்தகத் தடை விதித்ததாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலியக் குடியேற்றங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக ஐக்கிய இராச்சியம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச சட்டத்திற்கு முரணானதாகக் கருதப்படும் குடியேற்ற விரிவாக்க நடவடிக்கைகளும் தொடர்வதாகக் கூறப்படும் நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இஸ்ரேலிய குடியேற்றவாசிகளால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றத் திட்டங்களுக்கு எதிராக, பிரிட்டன் ஏற்கனவே சில இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனுடன் இணைந்து மேலும் 11 நாடுகளும் இஸ்ரேலிய குடியேற்றங்களுடனான வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் இதுதொடர்பாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது, பாலஸ்தீனியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியமும் தீவிர குடியேற்றவாசிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு எதிராக தடைகளை விதித்துள்ளதாக அதன் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை இத்தகைய குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக மூன்று வகையான தடைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களின் விரிவாக்கம் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் இஸ்ரேல் மீதான தூதரக மற்றும் பொருளாதார அழுத்தத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.

Post a Comment