முல்லைதீவு:சட்டம் ஒழுங்கு சீரழிவு!



இலங்கையின் வடபுலத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (24) அதிகாலை 2 மணியளவில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் தந்தை மற்றும் தாயின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளனர்.

அதன்போது மகள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடயவியல் காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பல கோணங்களில் விசாரணைகளை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.


No comments