மீண்டும் நீதியின் ஓலம்!



செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 52ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வரை 554 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 547 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி, மீண்டும் “நீதியின் ஓலம் எனும் பெயரிலான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக, யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 544-க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி என்பது, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட மனிதப் பேரவலத்தின் ஒரு சிறு சாட்சியம் மட்டுமே. புதைகுழியை இலங்கை அரசியல் இயந்திரங்கள் முறையாக விசாரணை செய்யாமல் மூடி மறைத்து வந்தன. இருப்பினும், கடந்த ஆண்டு அப்பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காக நடைபெற்ற அகழ்வின்போது மனித எலும்புக்கூடுகள் மீண்டும் கண்டறியப்பட்டன. தமிழ் மக்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான அழுத்தங்களின் மூலமே இதுவரை பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.”

இந்நிலையில் செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதி விசாரணை நடைபெற வேண்டும்.

செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்.

இனப்படுகொலையில் ஈடுபட்ட படை அதிகாரிகளுக்கு அனைத்து நாடுகளும் பயணத் தடையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை முழுமையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிறுத்தவும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவும் சர்வதேச அழுத்தம் தேவை.

சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய வேண்டும்.

வடக்கு-கிழக்கு தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டு, இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

அடிப்படையிலான போலித் தீர்வுத் திட்டங்கள் நிராகரிக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அதற்கு மாற்றீடான சட்டமூலம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு மீளப்பெறப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து 17ம் திகதியன்று யாழ். நூலகத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகி, யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் வரை சென்றடையவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments