பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைவு


பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.

இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள், குறிப்பாக காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இனிவரும் காலங்களில் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு ஒன்றிணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் காணி அபகரிப்பு இன்றளவிலும் தீவிரமடைந்துள்ளது. தமிழ் பேசும் மக்களின் நலனை கருத்திற் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த ஒற்றுமை தொடர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

அதேவேளை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நாட்டில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு குரலாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுகையில், இது இனவாத கூட்டணியல்ல, சட்டத்தின் பிரகாரம் மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணைக்கு அமைவாக, பொது கோட்பாட்டுக்கு அமைய அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஒன்றிணைந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒன்றிணைந்துள்ளோம். இது அரசியல் தேர்தல் கூட்டணியல்ல என்றார்.

புதிய அரசியலமைப்பு, மாகாண சபைத் தேர்தல் மற்றும் காணி பிரச்சினைக்கு தீர்வு காண்பதை அடிப்படையாக கொண்டு இந்த பொதுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது என தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதன்போது கூட்டாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments