இந்தியா அசாமில் வெள்ளம்: 78 பேர் உயிரிழப்பு


இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட பருவமழை வெள்ளத்தில் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 

அடுத்த மூன்று நாட்களுக்கு மேலும் பருவமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஏழு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 1,37,561 மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சராடியோ மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமாகத் தொடர்கிறது. அதனைத் தொடர்ந்து சிவசாகரில் 84,600 மக்களும், ஜோர்ஹட்டில் 49,911 மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனமழை காரணமாக, ஆசியாவின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான 2,900 கிலோமீட்டர் நீளமுள்ள பிரம்மபுத்திரா ஆறு, அசாமில் கரை உடைந்து பெருக்கெடுத்து ஓடியதால், ஆயிரக்கணக்கானோர் அரசு நிவாரண முகாம்களில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெள்ள நீரால் 21,523 ஹெக்டேர் பயிர் நிலங்கள் மூழ்கியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் முழுவதும் உள்ள விவசாயப் பகுதிகள் சேதமடைந்துள்ளன. சுமார் 17,000 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 11,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வீடுகள் சேதமடைந்துள்ளதாலோ அல்லது சேறும் சகதியுமாக நிரம்பியுள்ளதாலோ மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியவில்லை," என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா புதன்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும், பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை நிலைமையை ஆய்வு செய்ததோடு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு மத்திய அரசின் உதவி வழங்கப்படும் என மாநில அரசுக்கு உறுதியளித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

இதற்கிடையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அசாமின் சில பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து ஆகிய இடங்களில் வியாழன் முதல் சனிக்கிழமை வரை கன முதல் மிகக் கனமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments