கட்டுநாயக்கவில் சிமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 18ஆம் கட்டை சந்திக்கு அருகில் சிமெந்து உற்பத்தி மற்றும் பொதியிடும் தொழிற்சாலையொன்றை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதேச மக்கள் இன்று (19) காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில், குறித்த இடத்தில் ஆரம்பத்தில் நட்சத்திர தரச் சுற்றுலா ஹோட்டல் அமைப்பதற்கே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அதனை மாற்றி சிமெந்து உற்பத்தித் தொழிற்சாலைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும், இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுவதால் விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, சுற்றுலா ஹோட்டல்கள், சர்வதேச பாடசாலைகள், நீர்கொழும்பு கலப்பு, கண்டல் தாவரக் காடுகள் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்க நேரிடும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக, தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் சிமெந்து துகள்கள் விமானங்களின் இயந்திரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சில விமானப் பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த மற்றும் கத்தோலிக்க மதகுருமார்கள், மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், சர்வதேச பாடசாலை பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Post a Comment