அசோவ் கடலில் மேலும் 11 ரஷ்ய கப்பல்களை உக்ரைன் குறிவைத்துத் தாக்கியது!


அசோவ் கடலில் இரவு நேரத் தாக்குதல்களில் மேலும் 11 ரஷ்யக் கப்பல்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

"மக்யார்" என்ற தனது புனைப்பெயரால் அறியப்படும் கீவ்வின் ஆளில்லா விமானப் படைத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி, டெலிகிராமில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், தாக்கப்பட்ட இலக்குகளில் ஐந்து எண்ணெய்க் கப்பல்கள், ஐந்து சரக்குக் கப்பல்கள் மற்றும் ஒரு இழுவைப் படகு ஆகியவை அடங்கும் என்று கூறினார்.

ரஷ்யாவின் "நிழல் கடற்படை" என்று அழைக்கப்படுபவற்றைச் சேதப்படுத்துவதும் , மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கு ரஷ்யாவின் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதும் இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.  

ரஷ்ய கப்பல் போக்குவரத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், கடந்த ஒன்பது நாட்களில் அசோவ் கடலில் 116 கப்பல்கள் தாக்கப்பட்டதாக உக்ரைன் படைகள் கூறியுள்ளன.

போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய கப்பல் போக்குவரத்து மீது உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக, அசோவ் கடலில் 21 ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதாக சனிக்கிழமையன்று உக்ரைன் தெரிவித்தது.

உக்ரைன் தனது ட்ரோன் உற்பத்தித் திறனை அதிகரித்துள்ளதோடு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் அதிகளவில் குறிவைத்துத் தாக்கி வருகிறது . இது ரஷ்யாவின் உற்பத்தி வழிமுறைகளுக்கு இடையூறு விளைவிப்பதோடு, போரை ரஷ்யர்களுக்கே நேரடியாகக் கொண்டு வந்துள்ளது.

மேலும், உக்ரைன் ரஷ்யப் பிரதேசத்திற்குள் ஆழமாக ஊடுருவி, அதிக அளவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

No comments