தமிழ்த்தேசியப் பேரவை – தொல்.திருமாவளவன் இடையே கலந்துரையாடல்
தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும் இடையிலான சந்திப்பின்போது தமிழர்களின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் ஒருங்கிணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் குறித்து இருதரப்பினராலும் வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செல்வராஜா கஜேந்திரன், பொன்னுத்ரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தர்மலிங்கம் சுரேஷ், சட்டத்தரணி சுகாஷ் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை (3) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின்போது தமிழக முதலமைச்சர் ஜோசப் சி.விஜயுடனான சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேபோன்று ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக தமிழர்களின் தேசம், தனித்துவமான மக்கள் என்ற அங்கீகாரமும் அவர்களின் சுயநிர்ணய உரிமையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில் கூட்டாட்சிக் கட்டமைப்பிலான அரசியல் தீர்வை எட்டுவதற்கு இந்தியா வலுவான அரசியல் முன்முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.
அத்தோடு இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை, தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான நிரந்தர தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும் தமிழர்களின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் ஒருங்கிணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் குறித்து இருதரப்பினரும் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

Post a Comment