ரெலோவை புறக்கணியுங்கள் - ரெலோவின் மூத்த உறுப்பினர் தமிழ் மக்களிடம் கோரிக்கை


கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ  இருக்கும் வரை அக்கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜ பவானந்தா தமிழ் மக்களிடம் கேட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

சில சில்லறைகளின் சில்லறைத்தனமான செயற்பாடுகளால் இனவிடுதலைக்காக போராடிய பெரும் அமைப்பு சீரழிந்துவிட்டது .

குறிப்பாக ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் செயற்பாடுகளே கட்சி நலிவடைந்து போக பிரதான காரணமாகின்றது.

கட்சியின் மூத்த உறுப்பினர் ஜெயராம் சுரேஸ் என்பவரது தற்கொலை என கூறப்படும் விடயத்தில் , அவரின் உயிர் பறிபோனமைக்கு செல்வத்தின் செயற்பாடுகள் உள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

அது மட்டுமல்லாது அதற்கான சான்றுகளும் வலுவாக இருக்கின்றது.

பாலியல் விவகாரத்தில் சிக்குண்ட பின்னரும் தலைமை பதவியை தக்கவைக்கவென தலைமை குழுவிடம் கெஞ்சிப் பெற்ற கால அவகாசத்தை பயன்படுத்தி இன்று தனது பதவியை நிரந்தரமானதாக உறுதி செய்திருக்கிறார் 

சிரேஷ்ட உறுப்பினர் ரமேஷ்க்கு இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை. பாலியல் விவகாரத்துக்கும் தீர்வு வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக தமிழீழ விடுதலை இயக்கம் மீள புனரமைக்கப்பட வேண்டும். 

இதை சுட்டிக் காட்ட முயற்சித்தால் அல்லது, தவறைச் சுட்டிக்காட்ட முற்பட்டால் அவர்கள் எல்லாம் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக எம் எல்லோருக்க எதிரான பொது எதிரி எங்கோ இருக்கும் நிலையில் நாம் எமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.இதுதான் இன்றைய நிலைக்கும் காரணம் இவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

No comments