உலோக துண்டு - அதற்குள் என்புக்கூடுகள்!



செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமான வியாழக்கிழமையும் ஒரு குழந்தையின் என்புக்கூடு உட்பட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

இதனிடையே புதைகுழியில் சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் என்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை மிக கவனமாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன

இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 367 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன 

இதனிடையே செம்மணி சித்திபாத்தி இந்து மயானத்தை, இன அழிப்பின் சாட்சியமாகப் பேணும் வகையில் அதனை ஓர் நினைவகமாக மாற்றும் முன்மொழிவை நல்லூர் பிரதேசசபை முன்மொழிந்துள்ளது.

பிரதேசசபையின் தவிசாளர் மயூரன், "இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்ட எமது உறவுகள், இன்று செம்மணி சித்திபாத்தி இந்து மயானத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். எம்மீது நிகழ்த்தப்பட்ட கோரமான இன அழிப்பின் சாட்சியமாக மயானம் காணப்படுகின்றது. அந்தச் சாட்சியங்களைப் பாதுகாப்பதும், அதன் வரலாற்றை இளைய தலைமுறைக்குக் கடத்துவதும் எமது தார்மீகப் பொறுப்பாகும்" என்று அறிவித்துள்ளார்.


No comments