19,000 கோடி:முகமது விளக்கமறியலில்!
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் சுமார் 19,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தைச் சட்டவிரோதமான முறையில் அமெரிக்க டொலர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய பிரதான சந்தேகநபரான ஜெஃப்ரி முகமது என்பவரை எதிர்வரும் ஜூலை மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு முதன்மை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
காவற்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலுள்ள ‘ஏ.ஒய். இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் பணிப்பாளரான இச்சந்தேகநபர், கொழும்பு முதன்மை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அரசாங்கத் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, சந்தேகநபர் 'டெலிகிராபிக் டிரான்ஸ்பர் எனப்படும் பணப்பரிமாற்ற முறையைப் பயன்படுத்தி, தனது நிறுவனத்தின் ஊடாக இப்பெருந்தொகையான பணத்தை அமெரிக்க டொலர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார். பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறி இப்பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட போதிலும், அதற்கு நிகரான எந்தவொரு பொருளும் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது காவற்துறை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சாதாரண மக்களின் விபரங்களைப் பயன்படுத்தி 30-க்கும் மேற்பட்ட போலி வங்கி கணக்குகளை ஆரம்பித்து, அவற்றின் ஊடாகவே இப்பணப்பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இப்பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது மற்றும் எதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்துப் பரந்தளவிலான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சட்டவிரோத பணத்தையும் சந்தேகநபர் தனது வங்கி கணக்குகளின் ஊடாகப் பரிமாற்றம் செய்துள்ளதாகக் காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Post a Comment