பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும்!
பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் சில மாதங்களுக்குள் இரத்து செய்யப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுர மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அடிப்படை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். நீண்டகாலமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் சட்டத்தை நீக்கி, ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் புதிய சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதே தமது அரசாங்கத்தின் இலக்கு எனவும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக மிகவும் வலுவான புதிய சட்டமொன்றை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாக இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
தற்காலிகச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், 1982 ஆம் ஆண்டில் அது நிரந்தரச் சட்டமாக மாற்றப்பட்டது.
மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தினால் சட்டம் நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment