அனுர அரசிற்கு எதிராக யாழில் மக்கள்?
முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி அரசிற்கு எதிராக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மக்கள் வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளனர்.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த வலிகாமம் வடக்கு மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக இரண்டு பிரதான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
மயிலிட்டியில் தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
முன்னதாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பொதுமக்களின் காணி விடுவிப்பை வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் மதத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், அரசியல் வாதிகள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலர் பங்கெடுத்திருந்தனர்.

Post a Comment