கொத்து கொத்தாக சிறார் எலும்புக்கூடுகள்!



செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 9 எலும்புக்கூடுகளில் 8 சிறுவர்களின் எலும்புக்கூடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வில் பெரும்பாலானவை சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளாகவே காணப்படுகிறமை அதிர்ச்சியை தந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 318 ஆக உயர்வடைந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில், விசேட நிபுணர்களின் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்த எலும்புக்கூடுகளின் 4 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும் மொத்தமாக இதுவரை 318 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 302 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் இதுவரை முழுமையாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய அகழ்வுகளின் போது, மனித உடல்கள் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான பல தடயங்கள் சிக்கியுள்ளன.

குறிப்பாக, எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று தொடுகையுற்ற (ஒன்றின் மேல் ஒன்றாகப் பின்னப்பட்ட) நிலையில் இரு வெவ்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு பகுதியில் ஆறு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், பிறிதொரு பகுதியில் நான்கு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகத் தொடுகையுற்றவாறு கண்டறியப்பட்டுள்ளன.


No comments