பெயர் பலகையை மாற்றுவதால் வைத்தியசாலை அபிவிருத்தி அடையாது - சுகாதார அமைச்சர்
தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட குழு நியமிக்கப்பட்டு ஆராயப்படும் எனவும் , தற்போதைய சூழ்நிலையில், இந்த வைத்தியசாலையை உடனடியாக ஒரு மாவட்ட பொது வைத்தியசாலையாக (DGH) தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார அமைச்சர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதன் புற்றுநோய் பிரிவு தொடர்பாக தற்போது எங்களிடம் மூன்று விருப்பங்கள் (Options) உள்ளன:
முதலாவது விருப்பம்: இந்த வைத்தியசாலையை வட மாகாண சபையின் கீழேயே தொடர்ந்து வைத்திருப்பது. அதேநேரம், அதற்குத் தேவையான நிதி, புதிய உபகரணங்கள், கட்டிடங்கள் மற்றும் பணியாளர்களை மத்திய அரசு மூலமாக வழங்குவது. இந்த விருப்பத்தில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது என நினைக்கிறேன்.
இரண்டாவது விருப்பம்: நீங்கள் கூறியது போல, புற்றுநோய் பிரிவை மட்டும் ஒரு விசேட பிரிவாக (Specialized Unit) மத்திய அரசு (Line Ministry) பொறுப்பேற்பது.
மூன்றாவது விருப்பம்: முழு வைத்தியசாலையையும் மத்திய அமைச்சின் கீழ் கொண்டு வருவது.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு (DCC) இதனை மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தாலும், உங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, உங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமாகும்.
எனவே, இது தொடர்பாக ஆராய அமைச்சில் இருந்து ஒரு குழுவை நியமிப்பது சிறந்தது என நினைக்கிறேன். உங்களிடம் இருந்து மேலும் பல தகவல்களை நாங்கள் திரட்டுவோம். ஏனெனில், மத்திய அரசு பொறுப்பேற்பது என்பது சேவைகளை இன்னும் சிறப்பாகப் பேணுவதற்காக மட்டுமே இருக்க வேண்டும். வெறும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதாலோ அல்லது அமைச்சரவை ஒப்புதலைப் பெறுவதாலோ மட்டும் சேவைகளை மேம்படுத்திவிட முடியாது.
தற்போதைய சூழ்நிலையில், இந்த வைத்தியசாலையை உடனடியாக ஒரு மாவட்ட பொது வைத்தியசாலையாக (DGH) தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை நான் உண்மையாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஏனெனில், ஒரு ஆதார வைத்தியசாலைக்கும் (Base Hospital) மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் (DGH) இடையே உள்ள கட்டமைப்பு ரீதியான இடைவெளி மிகப்பெரியது.
அரசியல் காரணங்களுக்காக நான் இதன் பெயர் பலகையை 'DGH' என்று மாற்றிவிட முடியும், ஆனால் அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் பெயர் மாற்றுவது எங்களது வழக்கமும் அல்ல, நோக்கமும் அல்ல.
எனவே, இந்த மூன்று விருப்பங்கள் நம் முன்னால் உள்ளன. நியமிக்கப்படும் நிபுணர் குழு இது குறித்து ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும்.
அதேவேளை, இந்த புற்றுநோய் வைத்தியசாலைக்கும் ஆதார வைத்தியசாலைக்கும் தொடர்ந்து ஆதரவளிக்குமாறு எங்களது நலன்புரி அமைப்புகளிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். எமக்கு இன்னும் சிறந்த உபகரணங்களும் வசதிகளும் தேவைப்படுகின்றன என மேலும் தெரிவித்தார்.

Post a Comment