தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மேதின கூட்டத்திற்கு இலவசமாக பேருந்து நிலையத்தை வழங்கியுள்ள யாழ்.மாநகர முதல்வர்
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் நடத்துவதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடாது , யாழ்ப்பாணம் நெடுதூர பேருந்து நிலையத்தினை மாநகர சபை முதல்வர் வழங்கியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மே தின கூட்டம் யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்தில் மே முதலாம் திகதி நடைபெற்றது.
குறித்த பேருந்து நிலையத்தில் மே தின கூட்டம் நடாத்த நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் 27.04.2026ஆம் ஆண்டு திகதியிடப்பட்ட கடிதம் மூலம் யாழ்ப்பாண மாநகர முதல்வரிடம் அனுமதி கோரி உள்ளார்.
அதில் , மே முதலாம் திகதி அன்று மாலை 03.30 மணி முதல் இரவு 07 மணி வரையில் மே தின கூட்டத்திற்காக நெடுந்தூர பேருந்து நிலையத்தினை பயன்படுத்த அனுமதிக்குமாறும் , கூட்டத்திற்கு வருகை தரும் மக்களுக்கான குடிநீர் வசதி மற்றும் மலசல கூட வசதிகளுக்கு பேருந்து நிலையத்துடன் இணைந்த நீர்தாங்கி மற்றும் மலசல கூடங்களை பயன்படுத்த அனுமதிக்குமாறும் , இவற்றுக்காக மாநகர சபையினால் ,அறவீடு ஏதேனும் விதிக்கப்பட்டால் அவற்றை செலுத்த தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்
ஆனாலும் , எவ்வித கட்டணமும் அறவிடாது பேருந்து நிலையத்தினையும் அதனுடன் சேர்ந்த குடிநீர் வசதி மற்றும் மலசல கூடத்தை பயன்படுத்த முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.
அதேவேளை கூட்டத்திற்கு வருவோரின் மேலதிக குடிநீர் வசதிக்காக 1000 லீட்டர் குடிநீர் தாங்கி இரண்டு வைக்கபட்டு , அவற்றுக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் 4ஆயிரம் ரூபாய் வாடகை பணம் பெறப்பட்டதுடன் , குடிநீர் லீட்டர் ஒன்று 2 ரூபாய் வீதம் 2ஆயிரம் லீட்டர் 4ஆயிரம் ரூபாய்க்கும் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான சேவை கட்டணமாக ஆயிரம் ரூபாயும் , இவற்றுக்கான பெறுமதி சேர் வரியாக 900 ரூபாயும் அறவிடப்பட்டுள்ளது. ]
அதனடிப்படையில் மேதின கூட்டத்திற்கு வருகை தந்தோருக்கான குடிநீர் வழங்களுக்காக மாத்திரம் 09ஆயிரத்து 900 ரூபாய் மாநகர சபையால் அறவிடப்பட்டுள்ளது.
அவை தவிர பேருந்து நிலைய வளாகம் பாவிக்கப்பட்டமை , பேருந்து நிலைய குடிநீர் பாவிக்கப்பட்டமை , மலசல கூடம் பாவிக்கப்பட்டமை மற்றும் மறுநாள் பேருந்து நிலைய வளாகம் மலசல கூட சுத்திகரிப்பு செலவு என்பவற்றுக்கு எவ்வித கட்டணமும் அறவிடாது , அதற்கான செலவீனங்கள் மாநகர சபையே பொறுப்பேற்றுக்கொண்டது.
அதேவேளை குறித்த நெடுந்தூர பேருந்து நிலையம் மேதின கூட்டத்திற்கு வழங்கப்பட்டமையால் , பேருந்து நிலையத்தில் இருந்து இரவு கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் வேறு வேறு இடங்களில் நிறுத்தப்பட்டமையால் , அன்றைய தினம் கொழும்பு செல்ல வந்த பயணிகளும் பேருந்துகளை தேடி அந்தரித்து திரிந்தமையும் குறிப்பிடத்தக்கது
Post a Comment