செம்மணி: குழந்தைகளதும் புதைகுழியா?





செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றும் கைக்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அகழ்ந்தும் எடுக்கப்படுள்ளன.

அதன்படி அங்கு தற்போது முன்னெடுக்கப்படும் 3 ஆம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது அதிகளவான சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளப்பட்டு வருகின்றது.

அப் புதைகுழியில் இன்று வியாழக்கிழமை புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட 4 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அங்கு அடையாளப்படுத்தப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளுடைய எண்ணிக்கை 259 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 2 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அங்கு மொத்தமாக அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனிடையே மனிதப் புதைகுழி அகழ்வுத் தளத்திற்கு அருகில் காணப்படும் மயானத்தின் தகன மேடையும் கிளறப்பட்டு அதன் கீழும் அகழ்வு நடாத்தப்படவேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

ஏனெனில் அங்கு நடந்த அகழ்வின் போது புதிதாக ஒரு மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டது.

இருப்பினும் அந்த எலும்புக்கூடு சுத்தப்படுத்தப்பட்டு அதற்கான இலக்கமிடப்பட்டு அடையாளப்படுத்தப்படவில்லை.

எலும்புக்கூட்டின் மண்டை ஓடு மட்டுமே வெளியில் தெரிகின்றது. கழுத்துக்கு கீழே உள்ள பகுதிகள் அருகில் உள்ள தகன மேடையின் கொங்கிறிட் அடித்தளத்திற்குள் காணப்படுகிறது.

இந்நிலையில் அந்த எலும்புக்கூட்டினை அகழ்ந்து எடுப்பதற்காக மயானத்தின் தகன மேடையை கிளற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


No comments