ஐ.நா.வின் பாலியல் வன்முறை கறுப்புப் பட்டியலில் இஸ்ரேலும் ரஷ்யாவும் சேர்க்கப்பட்டுள்ளன


இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள வருடாந்திர அறிக்கை ஒன்றின்படி, மோதல் தொடர்பான பாலியல் வன்முறைக்காக இஸ்ரேலிய மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகளை ஐக்கிய நாடுகள் சபை முதல் முறையாக தனது கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், கடந்த ஆண்டு இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படக்கூடும் என எச்சரித்திருந்தார். இரு நாடுகளும் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தன.

மோதல் தொடர்பான பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகளுக்காக, பன்னிரண்டு நாடுகளில் உள்ள 77 அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ள அந்த அறிக்கை, 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ஆம் ஆண்டில் வழக்குகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, இஸ்ரேலியப் படைகள்,   காசா மற்றும் மேற்குக் கரை ஆகிய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாலஸ்தீனியக் கைதிகளுக்கு எதிராக, ஆவணப்படுத்தப்பட்ட முறையிலான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டன .

"பொருட்களைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை முயற்சி, பிறப்புறுப்புகளில் உடல்ரீதியான வன்முறை, பிறப்புறுப்புகளைக் குறிவைத்துச் சுடும் சம்பவங்கள், மார்பகங்கள் மற்றும் பிறப்புறுப்புகளைத் தொடுதல், வெளிப்படையான பாதுகாப்பு நியாயமின்றி நடத்தப்பட்ட ஆடை களைதல் மற்றும் உடற்குழிச் சோதனைகள், கட்டாய நிர்வாணமாக்கல் மற்றும் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்கள் ஆகியவை மீறல்களில் அடங்கும்" என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

குற்றவாளிகள் இஸ்ரேலிய இராணுவம், பாதுகாப்புப் படைகள் மற்றும் சிறைத்துறையைச் சேர்ந்தவர்கள் என ஐ.நா அறிக்கை அடையாளம் காட்டியுள்ளது.

ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய தூதர் டேனி டானன் அந்த அறிக்கையை வெட்கக்கேடானது மற்றும் அபத்தமானது என்று குறிப்பிட்டார்.

இந்த ஐ.நா. பொதுச்செயலாளருடன் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று டானன் சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார். குட்டரெஸ், ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் உலகின் மிகவும் இழிவான பயங்கரவாத அமைப்புகளுடன் இஸ்ரேலையும் அதே கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளார்.

விசாரணைகளுக்குத் தேவையான அணுகலை ஐ.நா. புலனாய்வாளர்களுக்கு இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருவதால், ஹமாஸுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளைச் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்று அந்த அறிக்கை தெரிவித்தது .

உக்ரைனில் உள்ள இராணுவ மற்றும் பொதுமக்கள் கைதிகளுக்கு எதிராக ரஷ்யப் படைகளால் நிகழ்த்தப்பட்ட 310 சரிபார்க்கப்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்களையும் ஐ.நா. மேற்கோள் காட்டியுள்ளது.

ஆதாரமற்ற இந்தப் பொய்கள் ரஷ்யாவை ஒரு வில்லனாகச் சித்தரிக்கின்றன என ரஷ்யத் தூதர் வாசிலி நெபென்சியா கூறினார்.

உக்ரேனியர்கள் ரஷ்யப் போர்க் கைதிகளை நடத்தும் விதம் குறித்து ரஷ்யா ஒரு அறிக்கையைத் தயாரித்து வருவதாக அவர் கூறினார்.

இந்தப் பட்டியலில் உக்ரைன் சேர்க்கப்படவில்லை என்றாலும், உக்ரைனியப் பாதுகாப்புப் படைகள் சம்பந்தப்பட்ட 31 சம்பவங்களை அந்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது அவற்றில் பெரும்பாலானவை 2025-ஆம் ஆண்டுக்கு முன்பே நிகழ்ந்தவை.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த மற்ற நாடுகளில் சூடான், ஹைட்டி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, மியான்மர், சிரியா மற்றும் மாலி ஆகியவை அடங்கும்.

No comments