தேசிய மக்கள் சக்தி:எதையும் தரப்போவதில்லை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு பகல் கனவு என வடகிழக்கு இணைந்த முன்னாள் மாகாண முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண அதிகாரங்களை இல்லாது ஒழிப்பதற்காக, 13ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட மாகாண அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் சட்ட நடைமுறைகளுக்கு முரணாக ‘பிரஜா சக்தி’ குழுக்களை உருவாக்கியுள்ளது என தெரிவித்தார். தமிழ் அரசியல்வாதிகள் அந்த விடயங்களை நன்கு அறிந்திருந்தும் ஒற்றுமையுடன் எதிர்க்கத் தவறிவிட்டனர் என்றும், சொந்த அரசியலுக்காக வழக்குகளைத் தொடரும் அவர்கள், இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதில் ஒற்றுமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் ஆளுநர் மாகாண அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்குத் தாரை வார்க்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவது வெளிப்படையாகத் தெரிகிறது என அவர் குறிப்பிட்டார். மாகாண சபை ஒன்று இல்லாத நிலையில், மாகாணத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு ஆளுநரிடம் உள்ளபோதிலும், மத்திய அமைச்சின் பிடிக்குள் மாகாண அமைச்சுக்களை வைத்திருப்பதற்காக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைக் கண்காணிப்புப் பணிகளில் அவர் நியமித்துள்ளார் என்றும், இது மாகாண அதிகாரங்களை முழுமையாகப் பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாடு என்றும் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment