விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு!!


தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் நிலவி வந்த குழப்பங்களுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) ஆதரவு அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) அறிவித்து, ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளதாகவும், தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என த.வெ.கவின் மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ஆதரவுக் கடிதத்தை பெற்றுக்கொண்டு வெளியே சென்ற ஆதவ் அர்ஜுனா ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

வெற்றி வெற்றி வெற்றி. தோழமை கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க அனைவருக்கும் நன்றி. ஜனநாயகம் காக்கப்படும். த.வெ.க தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார்” எனக் கூறினார். 

வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் அதிகாரபூர்வக் கடிதத்தை இன்று (9) வழங்கியுள்ளார். இதன் மூலம் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை பலத்தை விஜய் உறுதி செய்துள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தி.மு.க கூட்டணியில் இருந்த வி.சி.க, தற்போது நிலவும் அசாதாரணமான சூழலில் தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது வி.சி.க-வின் ஆதரவும் சேர்ந்துள்ளதால், த.வெ.க கூட்டணிக்குத் தேவையான 118 இடங்கள் எட்டப்பட்டுள்ளன.

ஆதரவு கடிதங்கள் அனைத்தும் கைவசம் உள்ள நிலையில், த.வெ.க தலைவர் விஜய்  மீண்டும் இன்று மாலை தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் த.வெ.க.வின் வெற்றிகரமான நகர்வுகளை கண்டு பூரிக்கும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

No comments