நேட்டோ ஆதரவு பெற்ற ஆக்கிரமிக்கு எதிராகப் போராடி வருகிறோம்: வெற்றி நாள் அணிவகுப்பில் புடின்


சனிக்கிழமையன்று மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற சுருக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள், நேட்டோவின் அனைத்து நாடுகளின் ஆதரவு பெற்ற ஒரு ஆக்கிரமிப்பு சக்திக்கு எதிராகப் போராடி வருவதாகக் கூறினார்.

பாரம்பரியமான வெற்றி நாள் அணிவகுப்பு, இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியின் தோல்வியை நினைவுகூருகிறது. அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகளில், வீரர்கள் ரஷ்யக் கொடியை ஏந்தியபடி சதுக்கத்திற்குள் அணிவகுத்துச் செல்வது காட்டப்பட்டது.

வெற்றி எப்போதுமே நம்முடையதாக இருந்துள்ளது, இனியும் நம்முடையதாகவே இருக்கும், என்று புதின் தனது உரையில் கூறினார். நமது மன உறுதி, துணிவு மற்றும் வீரம், நமது ஒற்றுமை, எதையும் தாங்கிக்கொண்டு எந்தவொரு சவாலையும் வெல்லும் திறன் ஆகியவையே வெற்றிக்குத் திறவுகோல் ஆகும்.

உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள், முழு நேட்டோ கூட்டமைப்பின் ஆயுதங்கள் மற்றும் ஆதரவுடன் செயல்படும் ஒரு ஆக்கிரமிப்புப் படையை எதிர்கொள்கின்றனர் என்று கூறிய அவர், அவர்கள் ஒரு நியாயமான காரணத்திற்காகப் போராடுகிறார்கள் என்று தாம் நம்புவதாகவும் மேலும் கூறினார்.

இந்த அணிவகுப்பில் கலந்துகொண்ட வெளிநாட்டுத் தலைவர்களில் மலேசியாவின் மன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், லாவோஸ் அதிபர் தோங்லூன் சிசோலித், கஜகஸ்தானின் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், உஸ்பெகிஸ்தானின் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் மற்றும் பெலாரஸின் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆகியோர் அடங்குவர். 

சனிக்கிழமையன்று மாஸ்கோவிற்கு வருகை தந்த ஒரே ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஆவார், ஆனால் அவர் அணிவகுப்பில் கலந்துகொள்ளவில்லை.

கிரெம்ளினில் நடந்த சந்திப்பின்போது, ​​உங்கள் பயணத்தில் சில சிரமங்கள் இருந்தன என்பது எனக்குத் தெரியும் என்று புதின் ஃபிகோவிடம் கூறினார்.

ஆனால் நீங்கள் இங்கே இருப்பதுதான் முக்கியமான விஷயம் என்று கூறிய அவர், ஸ்லோவாக்கியாவின் எரிசக்தி தேவைகளை ரஷ்யாவால் பூர்த்தி செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

No comments