யாழ்.போதனா வைத்தியசாலை களஞ்சியசாலையில் இருந்து 60 வீதமான மருந்துகள் தீயில் எரிந்து நாசம்


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் , களஞ்சிய சாலையில் இருந்த 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ச. சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார். 

போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில் பலத்த போராட்டத்தின் மத்தியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

இந்நிலையில் குறித்த பகுதிகளை இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மருந்து களஞ்சிய சாலையில் புற்று நோய்க்கான மருந்துகள் , சத்திர சிகிச்சைக்கான மருந்துகள் உள்ளிட்ட பெறுமதியான மருந்துகள் பல பாதுகாக்கப்பட்டிருந்தன. 

தீ விபத்தினால் அதில் சுமார் 60 வீதமானவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 

தற்போது வைத்தியசாலையின் அவசர தேவைக்கானமருந்துகள் , வைத்தியசாலையின் உள்ளக மருந்தகத்தில்  காணபப்டுகின்றன, அவற்றினை விட மேலதிகமாக மாவட்டத்தின் பிற வைத்தியசாலைகள் மற்றும் வவுனியா , அநுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளிலும் இருந்து மருந்துகளை எடுத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனூடாக எதிர்வரும் சில தினங்களுக்கு விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் , வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்கு வருவோர் ஆகியோருக்கு மருந்துகளை விநியோகிக்க முடியும் 

அதற்கு இடையில் கொழும்பில் இருந்து மருந்துகளை எடுத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம். 

அதேவேளை தீ விபத்து தொடர்பிலான விசாரணைகளை அரச இராசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினரும் முன்னெடுக்கவுள்ளனர். 

அவர்கள் கொழும்பில் இருந்து திங்கட்கிழமையே வைத்தியசாலைக்கு நேரில் வந்து விசாரணைகளை முன்னெடுப்பார்கள். அது வரையில் களஞ்சிய சாலை பொலிசாரின் பாதுகாப்பில் இருப்பதுடன் , தீயில் எரிந்த மருந்துகளையும் பாதுகாப்பாக வைத்திருந்து , அவர்களின் விசாரணைகளின் பின்னரே அவற்றினை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் 

No comments