காவல்துறை தாளத்திற்கு ஆடமுடியாது?
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாவனையிலிருந்த பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அந்த முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு காவல்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதனிடையே பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது.
இதன் போது காவல்துறையினரால் கொண்டுவரப்பட்ட பிணைமுறி நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுமுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அண்மையில் அளவீட்டுப் பணி இடம்பெறவிருந்தது. காணிகளின் உரிமையாளர்கள் அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத போதிலும், விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை பிரதேசசபை தவிசாளர் சுகிர்தன் அடையாளம் காட்டியிருந்தார்.
இதையடுத்து, வீதியை இடைமறித்து அமைக்கப்பட்டுள்ள எல்லையை நாளைமறுதினத்துக்குள் அகற்றுமாறும், இல்லையேல் பிரதேசசபை அந்த எல்லையை அகற்றும் என்றும் வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தனால் தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் பிரதேசசபையின் நடவடிக்கைக்கு எதிராக, தையிட்டி விகாராதிபதி காவல்துறையிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
முறைப்பாட்டுக்கு அமையவே தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்துவரும் நடவடிக்கைக்குத் தடைவிதிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
எனினும், காவல்துறையினரின் சமர்ப்பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதனிடையே எம்.ஏ.சுமந்திரன் வலிகாமம் வடக்கு பிரதேசசபை சார்பில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment