பௌத்த பிக்கு பாலியல் குற்றம்?
அனுராதபுரத்தில் பதிவாகியதாகக் கூறப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவன ரீதியான மற்றும் சட்ட சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று (25) அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உபகுழுவுக்கு ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் சமன்மலி குணசிங்க மற்றும் சட்டத்தரணி சமிந்திராணி கிரியெல்ல ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.
ஹேமாலி வீரசேகர, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, சட்டத்தரணிகளான சாகரிகா அத்தவுட, நிலாந்தி கொட்டஹச்சி, நிலுஷா லக்மாலி கமகே, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, ஹசர லியனகே, ஹிருணி விஜேசிங்க மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் இந்த உபகுழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தின்போது, பொதுமக்களின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ள இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் பாதுகாப்பு மற்றும் தற்போதைய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இலங்கை பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் பங்கேற்புடன் 2026 ஜூன் 05ஆம் திகதி விசேட கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின்போது, குறித்த வழக்கின் முன்னேற்றம் குறித்தும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்குப் பொறுப்பான சட்டங்கள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது

Post a Comment