தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் இலக்கும் ரில்வின் சில்வா எதிர்பார்க்கும் காலநீட்சியும்! பனங்காட்டான்


அரசை உருவாக்கிய தங்கள் இலக்குகளை அடைய ஐந்து வருடங்கள் போதாது என்று கூறும் ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா, உதாரணத்துக்கு சிங்கப்பூரும் சீனாவும் இருபத்தைந்து வருடங்கள் வரை மாற்றங்களை நிறைவேற்ற எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இது இலங்கையில் ஒற்றையாட்சிதான் ஏற்படும் என்ற அச்சத்தை மேலும் வலுவாக்குகிறது. 


தமிழ்த் தேசிய கட்சிகளை இணைப்பதற்கான இன்னொரு முயற்சியை புதிதாக உருவாகியுள்ள ஒரு கூட்டு ஆரம்பித்துள்ளது. இதன் பெயர் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை. 

இனப்பிரச்சனைக்கான தீர்வு, புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டில் கொண்டு வருவதே இந்தப் புதிய பேரவையின் நோக்கம் என்று ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக அக்கறையுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் ஒன்று சேர்ந்து தம்மை ஒரு பேரவை ஆக்கியுள்ளனர். 

கடந்த காலங்களில் மட்டுமன்றி நிகழ்காலத்திலும் பேரவை என்ற சொற்பதம் நன்கு பிரபல்யமானது. தமிழ்த் தேசிய பேரவை என்று சில மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமைப்பு இன்னமும் இயங்கி வருகிறது. அது வேறு, இப்போது உருவாகியுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை வேறு. 

சட்டத்தரணிகள் பேரவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரான இரண்டாவது சந்திப்பு கடந்த வியாழக்கிழமை 9ம் திகதி கொழும்பில் மூடிய அறைக்குள் இடம்பெற்றுள்ளது. இதனால் இணைய வழியில் பங்கேற்க விரும்பியவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மட்டுமே பங்குபற்றுவதாக இந்தப் பேரவை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய என்ற பதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளையும், முன்னாள் ஆயுதக் குழுக்கள் சிலவற்றையும் சேர்த்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய பின்னரே உலகளாவிய ரீதியில் பிரபல்யமானது. இக்கூட்டமைப்பில் ஆரம்பத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் மட்டுமே அரசியல் கட்சிகளாக இடம்பெற்றிருந்தன. பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இடத்தை தமிழரசுக் கட்சி தனதாக்கியது. ஆனால், கடந்த பதினாறு ஆண்டுகளில் பல பிளவுகளையும், வெடிப்புகளையும் சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பின்னர் வெவ்வேறானது. 

இப்போது காலத்தின் தேவையை உணர்ந்து மீண்டும் ஓர் இணைப்பு தமிழ்த் தேசியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி எண்ணியவாறு வெற்றி பெற வேண்டுமென பலரும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தினாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பணிக்காக சட்டத்துறையினர் ஐந்து பேரையும், கட்சிகளின் பிரதிநிதிகள் ஐந்து பேரையும் கொண்ட குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மூத்த சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் புகழ்பெற்ற சட்டத்தரணிகளான செல்வகுமாரன், தமிழ்மாறன், குருபரன், கலாநிதி சிவகுமார் ஆகியோர் சட்டத்தரணிகள் சார்பில் இக்குழுவில் இடம்பெறுகின்றனர். இவர்கள் ஐவரையும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையே தெரிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி சட்டத்தரணியாகவுள்ள கனகஈஸ்வரன் இலங்கையில் பிரபல்யமாக விளங்கிய சட்டத்தரணியும் செனட்டருமான அமரர் எஸ்.ஆர்.கனகநாயகத்தின் புதல்வர். 1976ம் ஆண்டில் தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு எதிரான ட்ரயல் அற் பார் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களில் கனகஈஸ்வரனும் ஒருவர். வடமாகாண முதலமைச்சராகவிருந்த சி.வி.விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியாக அரசியலில் அறிமுகமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பெயர்கள் வெவ்வேறு காரணங்களால் கட்சிக்குள் பேசப்பட்ட வேளையில் அவர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் கனகஈஸ்வரன் பெரும் பங்காற்றியதாக அரசியல் விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது ஞாபகம் இருக்கிறது. 

இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்றைய சட்டத்தரணிகளும் சாதாரணமானவர்கள் அல்ல. அரசியலமைப்பு விவகார துறைசார் நிபுணர்களாகவும், சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களாகவும், பிரபல வழக்கறிஞர்களாகவும் பெயர் பெற்றவர்கள். எனவே இவர்கள் முன்னெடுத்திருக்கும் முயற்சி குறிப்பிடத்தக்களவில் எடுத்த காரியத்தில் வெற்றியை பெற்றுக்கொடுக்குமென நம்பிக்கை கொள்ள இடமுண்டு. 

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் சார்பில் தமிழரசு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் சார்பில் ஒவ்வொருவரும், கிழக்கு மாகாணத்திலிருந்து ஒருவருமாக அரசியல் கட்சிகள் சார்பில் இக்குழுவில் இடம்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழர் தேச அரசியலில் இரு துருவங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், எம்.ஏ.சுமந்திரனும் சட்டத்தரணிகளாக இருப்பதால் முறையே தமிழ்த் தேசிய பேரவை, தமிழரசு கட்சி ஆகியவை சார்பில் இக்குழுவில் இடம்பெறும் வாய்ப்பு உண்டு. கிழக்கு மாகாணத்திலிருந்து இடம்பெற இருப்பவர் தமிழரசு கட்சிக்காரராக இருப்பார் என்ற அறிவிப்பு சாணக்கியனை இக்குழுவுக்குள் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சியாக இருக்கலாமென அனுமானிக்கப்படுகிறது. 

புதிய அரசியலமைப்பினூடாக சகலராலும் ஏற்கப்படும் இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படுமென்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தொடர்ந்து கூறி வருகிறார். அண்மையில் தம்மைச் சந்தித்த தமிழரசுக் கட்சி குழுவினரிடம் இதனையே ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்கவும் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே தமிழ்ச் சட்டத்தரணிகள் தம்மை ஒரு பேரவை ஆக்கி தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்துக் கொண்டு புதிய அரசியலமைப்புக்கு தமிழர் தரப்பிலான பொது ஆவணத்தை வடிவமைக்க முன்வந்துள்ளனர் என்று கருதப்படுகிறது. 

2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய அணிகளை ஒன்றாக இணைப்பதென்பது அசாத்தியமானதாகக் காணப்பட்டு வருகிறது. பல தடவைகள் பலர் இது தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் வேதாளத்தின் கதையாகப் போயிற்று. கதிரை ஆசை, பதவி மோகம், தேர்தல் வெற்றி போன்ற சுயகாரணிகள் இதற்குத் தடையாக இருந்து வந்துள்ளன. எனினும், இப்போது இம்முயற்சியை மேற்கொண்டிருப்பவர்கள் அக்கறையுள்ள சட்டத்தரணிகளாக காணப்படுவதால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை குலையாது இவர்கள் செயற்படும் சாத்தியம் பெருமளவில் காணப்படுகிறது. 

பிரச்சனைக்குரியவர்களான தமிழ்த் தேசிய கட்சிகளை இணைக்கும் முதற்கட்டம் வெற்றி பெற்றுள்ளது. அனைத்துக் கட்சிகளுமே சம~;டியை ஏற்றுக் கொள்பவையாக தம்மை அடையாளம் காட்டியுள்ளன. எனினும், ஏக்கராஜ்ய இடையிடையே வந்து தலையைத் தூக்கி பிளவை ஏற்படுத்துகிறது. எதுவானாலும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை ஒரு கோட்டில் இவர்கள் அனைவரையும் இணைக்ககூடிய வல்லமை கொண்டவர்கள் என தமிழ் மக்கள் மத்தியில் அபிப்பிராயம் உள்ளது. 

மறுபுறத்தில், ஜே.வி.பி.யும் அதன் இன்னொரு வடிவமான தேசிய மக்கள் சக்தியும் இனப்பிரச்சனை தீர்வு விடயத்திலும், புதிய அரசமைப்பு உருவாக்கத்திலும் எவ்வளவு தூரத்துக்கு அக்கறை உள்ளன என்ற கேள்வி உள்ளது. 

புதிய அரசியலமைப்பு உருவாகும் வரை மாகாண சபை முறைமை இருக்குமென ரில்வின் சில்வா சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆனால் மாகாண சபைக்கு தேர்தல் நடைபெறுமென்று அவர் கூறவில்லை. அவர் கூறும் மாகாண சபை முறைமை என்பது தற்போதுள்ள ஆளுனர்கள் நிர்வாகத்தை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. சில மாகாண ஆளுனர்கள் அரசியல்வாதிகள் போலவும், அமைச்சர்கள் போலவும் கருத்துரைத்து வருகின்றனர். தங்களை நியமித்த அரச நிர்வாகத்தின் பேச்சாளர்கள் போலவும் காணப்படுகின்றனர். இதனைத்தான் ரில்வின் சில்வா குறிப்பிட்டார் அல்லது விரும்புகிறார் என்று சொல்ல முடிகிறது. 

1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சேகுவேரா புரட்சி என்று ஜே.வி.பி.யினர் மேற்கொண்ட நடவடிக்கையின் நினைவு தினம் கடந்த ஐந்தாம் திகதி ஏப்ரல் வீரர் தின நினைவேந்தல் என வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டது. இதில் உரையாற்றிய ரில்வின் சில்வா என்ன சொன்னார் என்பதை சற்று நோக்க வேண்டும். அது இவ்வாறு அமைந்திருந்தது:

'நாட்டை ஒரே நாளில் அபிவிருத்தி செய்ய முடியாது. சமுதாயத்தை மாற்றவும் முடியாது. இன்றைய அரசை உருவாக்கிய இலக்குகளை அடையும்வரை அதனைப்  பாதுகாக்க வேண்டியது அவசியம். 76 ஆண்டுகளாக நிலவி வரும் பழைய அமைப்பை மாற்றுவது எளிதான காரியம் அல்ல. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகள் தங்களது மாற்றங்களை நிறைவேற்ற பத்து முதல் இருபத்தைந்து ஆண்டுகளை எடுத்துக் கொண்டன. முழு சமுதாயத்தையும் மாற்ற எமக்கும் பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே நாம் இன்றைய அரசை உருவாக்கிய இலக்குகளை அடையும்வரை அதனைப் பாதுகாக்க வேண்டும்" என்பதே ரில்வின் சில்வாவின் உரையின் முக்கிய வரிகள். 

இன்றைய ஆட்சியில் பேச்சும் போக்கும் செயலும் ஒரு கட்சி ஆட்சியை நோக்கியே செல்வதாக ஓர் அச்சம் பரவலாகக் காணப்படுகிறது. தமிழர் தரப்பிலும் இந்தச் சந்தேகம் பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. தேசிய மக்கள் சக்தி அரசின் பின்னணியில் இயங்கும் ஜே.வி.பி. இவ்விடயத்தில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை ரில்வின் சில்வாவின் உரைகள் ஒளிவு மறைவின்றி தெரியத்தருகிறது. 

இதன் அர்த்தம் என்ன என்பதை அலசி ஆராய வேண்டியதில்லை. தமிழர் பிரச்சனை தீர்வு விடயத்தை முன்னெடுக்க உருவாகியிருக்கும் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை இதனை கவனத்தில் கொண்டிருப்பார்கள் என நம்புவோம். 

No comments