லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது: வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ரொக்கெட் வீசியது!


அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற ஒரு நாள் கழித்து, இன்று புதன்கிழமை  இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் மாறி மாறித் தாக்குதல்களை நடத்திக்கொண்டன.

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

தெற்கு லெபனானில் குறிவைக்கப்பட்ட தரைவழிப் படை நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.  

அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி சுமார் 30 ரொக்கெட்டுக்ள் ஏவப்பட்டதைக் கண்டறிந்ததாக இஸ்ரேலிய இராணுவம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. 

வடக்கு இஸ்ரேல் மீதான தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றிருந்தது. லெபனானில் இருந்து நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஒருவர் லேசான காயமடைந்ததாக இஸ்ரேலிய ஆம்புலன்ஸ் சேவையான மாகன் டேவிட் அடோம் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களைக் களைவதையும், உறவை இயல்பாக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் நோக்கமாகக் கொண்டு இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகள் வாஷிங்டனில் பேச்சுவார்த்தைகளுக்காகச் சந்தித்த ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன என்று இஸ்ரேல் கூறுகிறது.  

ஹிஸ்புல்லா என்பது லெபனானில் உள்ள, ஈரானின் ஆதரவு பெற்ற ஒரு துணை ராணுவக் குழு மற்றும் அரசியல் கட்சியாகும். இது அந்நாட்டின் மீது சக்திவாய்ந்த செல்வாக்கைச் செலுத்தி வருகிறது. 

கடந்த வாரம்இஸ்ரேலியத் தாக்குதல்களில் 350-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் மத்திய பெய்ரூட் மீது வெறும் 10 நிமிடங்களில் நடத்தப்பட்ட சுமார் 100 தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

No comments