முஜிபுர் ரஹ்மான்:சஹ்ரானுடன் கூட்டு?
முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் நடத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் முஸ்லிம் சமூகம் பாரிய இழிவுக்கும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்தது. சஹ்ரான் உள்ளிட்ட குழுவினரால் யாருடைய உதவியும் இன்றி அவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே நிலவுகிறது. தற்போதைய அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன அன்று ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, சஹ்ரானுக்குப் பின்னால் சிலர் இருப்பதை உறுதிப்படுத்தி ஒரு துண்டுச் சீட்டில் பெயரையும் எழுதிக் கொடுத்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாக்குதலின் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்போம் என்ற வாக்குறுதியுடன்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால், இறுதியில் ரிசாட் பதியுதீன், அவரது சகோதரர் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரையே சூத்திரதாரிகளாகச் சித்தரித்தனர். போதிய சாட்சியங்கள் இல்லாததால் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
தேர்தல் காலத்தில் 'சூத்திரதாரி' ஒருவர் இருப்பதாகக் கூறிக்கொண்டவர்கள், இப்போது அப்படி எவரும் இல்லை என்கின்றனர். அந்தக் கருத்துக்கு எதிராக நான் பேசும் போது, என்னையே சூத்திரதாரியாகச் சித்திரிக்கின்றனர். சஹ்ரானுக்கு உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறியுமாறுதான் நாங்கள் கேட்கிறோம். ஆனால், அவர்கள் சஹ்ரானுடன் விசாரணையை முடித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.
சஹ்ரானுக்கு உதவியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மிரட்டல்கள் மூலம் உண்மையை மறைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோமென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Post a Comment