தற்கொலையா? கொலையா?
தேசிய மக்கள் சக்தியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்காக, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தைச்சேர்ந்த அதிகாரி ஒருவர்,; சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தன்னுயிரை மாய்த்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியக் கடன் வழங்குநர் ஒருவருக்கு வழங்கப்படவிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்தும் நிதியை, சைபர் மோசடி மூலம் திசைதிருப்பியமை தொடர்பான விசாரணைக்காக நான்கு சிரேஸ்ட அதிகாரிகளை அரசாங்கம் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்திருந்தது.
அவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர் பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு தொடர்புடைய அதிகாரிக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவர் அங்கு முன்னிலையாகத் தவறியிருந்த நிலையிலேயே தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதிகாரி சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிடையே பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.

Post a Comment