வடக்கு முதலிடத்தில்!

 


இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் மிகச் சிறந்த நிலையை எட்டியுள்ளன.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9,191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் அடிப்படையில் 65.19 சதவீதமாகும். இதன் மூலம் மாகாணங்களுக்கிடையிலான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் பெருமையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


மேலும், உயிரியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் முதலிடத்தையும், பௌதீக விஞ்ஞானம் மற்றும் வர்த்தகப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதத்தில் தேசிய ரீதியில் ஐந்தாம் இடத்தையும் வடக்கு மாகாணம் இம்முறை பெற்றுக்கொண்டுள்ளது.


கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் பல்கலைக்கழகத் தகுதியைப் பெற்றவர்களின் வீதத்தில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த வடக்கு மாகாணம், இம்முறை தனது அடைவுமட்டத்தை மேலும் உயர்த்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேவேளை, பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒப்பிடுகையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இதற்கு மேலதிகமாக, இம்முறை மாகாண ரீதியாக 534 மாணவர்கள் சகல பாடங்களிலும் அதிவிசேட சித்தியான 'ஏ' (3ஏ) பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். இது தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் 3.79 சதவீதமாகும். 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் வீதத்தின் அடிப்படையிலான தரவரிசையிலும் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து மேலும் ஒரு சாதனையைத் தனதாக்கியுள்ளது.

No comments