டெல் அவிவ் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்


இன்று புதன்கிழமை அதிகாலையில் டெல் அவிவ் அருகே நடந்த ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானின் மிக மூத்த பாதுகாப்பு அதிகாரியான அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாகவே தெஹ்ரான் இந்த ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

டெல் அவிவ் நகருக்கு வெளியே உள்ள ரமத் கான் நகரில், ஒரு குடியிருப்பு கட்டிடம் கொத்துக் குண்டுத் தாக்குதல்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறை தெரிவித்தது. அங்கு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலின் மாகன் டேவிட் அடோம் அவசர மருத்துவ சேவை கூறியுள்ளது.

மத்திய இஸ்ரேல் முழுவதும் பல இடங்களில் விழுந்த வெடிபொருட்கள் தாக்கியதோடு , ஒரு தொடருந்து நிலையத்தையும் சேதப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல் அவிவின் பிரதான தொடருந்து நிலையத்தில், சிதறல்களால் நடைமேடைகள் சேதமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய தொடருந்து நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

நாடு முழுவதும் தொடருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

(டெல் அவிவ்) மாவட்டத்திற்குள் வெடிமருந்து சிதறல்கள் சம்பந்தப்பட்ட பல தாக்கப் பகுதிகளில் தங்களது வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments