ஈரான் போர்: மேலும் ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பவுள்ளது அமெரிக்கா
ஈரானில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகள்) மேலும் சுமார் 3,000 வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுவதாக , வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மேற்கோள் காட்டிய இரண்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இவ்விவகாரம் குறித்து அறிந்த இருவரை மேற்கோள் காட்டி, ஆயிரக்கணக்கான வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இந்தப் படைகள், உலகின் எந்தப் பகுதிக்கும் விரைவாகச் செல்லும் திறனுக்காக அறியப்பட்ட படைப்பிரிவான, இராணுவத்தின் 82வது வான்வழிப் பிரிவாகும்.
மத்திய கிழக்கில் படைகள் எங்கு செல்லும் அல்லது எப்போது அங்கு வந்து சேரும் என்பதை அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
82வது வான்வழிப் படைப்பிரிவு, வடக்கு கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது, பகை அல்லது சர்ச்சைக்குரிய பிரதேசங்களுக்குள் பாராசூட்டில் குதித்து நிலத்தைக் கைப்பற்றுவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
ஈரானில் படைகளை அனுப்புவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தனர்.
ஆனால், இந்த இராணுவக் குவிப்பானது, ஹோர்முஸ் ஜலசந்தியை பலவந்தமாக மீண்டும் திறப்பது அல்லது ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைக் கைப்பற்றுவது போன்ற எதிர்கால நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கக்கூடும் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம், அமெரிக்கா தனது யுஎஸ்எஸ் பாக்சர் என்ற நீர்நிலத் தாக்குதல் கப்பலில் 2,500 கடற்படை வீரர்களையும் மாலுமிகளையும் அப்பகுதிக்கு அனுப்பியது.
82வது வான்வழிப் படைப் பிரிவை நிலைநிறுத்துவது குறித்து டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக, தி நியூயார்க் டைம்ஸ் திங்களன்று முதன்முதலில் செய்தி வெளியிட்டது.

Post a Comment