ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்: 31-வது நாளில் என்ன நடக்கிறது?


அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களை இரவு நேரத்தில் தாக்கியுள்ள நிலையில், ஈரானியத் தலைநகரில் மின்சார உள்கட்டமைப்பு குறிவைக்கப்பட்டுள்ளது. இந்த மோதலால் உலகளாவிய பங்கு மற்றும் எண்ணெய் சந்தைகளில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட மின் தடை, பின்னர் சீரமைக்கப்பட்டுவிட்டது.

தெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டன. பெருநகர தெஹ்ரானின் ஒரு அங்கமான ரே நகரில் மற்றொரு வெடிச்சத்தம் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானிய அரசாங்கத்தின் உள்கட்டமைப்புகளை, “தெஹ்ரான் முழுவதும் தற்போது தாக்கி வருவதாக” இஸ்ரேலிய இராணுவம் திங்களன்று கூறியது.

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்கா தரைவழிப் படையெடுப்பைத் திட்டமிடும் அதே வேளையில், சாத்தியமான பேச்சுவார்த்தைகள் குறித்தும் செய்திகளை அனுப்பி வருவதாக முன்னதாகக் கூறியிருந்தார். அமெரிக்க வீரர்கள் களமிறக்கப்பட்டால் பதிலடி கொடுக்க தெஹ்ரான் தயாராக உள்ளது என்றும் அவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஈரானிய எதிர்க்கட்சிக் குழுவான, முஜாஹிதீன்-இ-கல்க் (MEK) உடன் இணைந்து பணியாற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் இருவர் தூக்கிலிடப்பட்டதாக அரை அதிகாரப்பூர்வ தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு இதற்கு முன்னர் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கராஜ், ஷிராஸ், கோம், அபாதான் மற்றும் தப்ரிஸ் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானுக்கு அருகிலுள்ள மின்சார உள்கட்டமைப்பும் குறிவைக்கப்பட்டதால், பல மணிநேர மின்வெட்டு ஏற்பட்டது. இருப்பினும், மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது. 

ப்ரிஸில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலையும் தாக்கப்பட்டது. தப்ரிஸ் பெட்ரோ கெமிக்கல் ஆலையில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது என்றும், ஆலையின் நிலைமை முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு பகிரங்கமாக அழுத்தம் கொடுத்த போதிலும், தரைவழித் தாக்குதல் நடத்த வாஷிங்டன் சதி செய்வதாக தெஹ்ரான் குற்றம் சாட்டிய நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு பேட்டியில், ஈரானில் உள்ள எண்ணெயைக் கைப்பற்ற விரும்புவதாகக் கூறினார். 

நாங்கள் ஈரானுடன் ஒரு உடன்பாடு செய்வோம் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

போரைத் தணிக்கும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைகளை நடத்திய பாகிஸ்தான் வரும் நாட்களில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகி வருவதாகக் கூறியதைத் தொடர்ந்து ட்ரம்ப் தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

No comments