வெளிச்சக்திகளின் தலையீடோ, நிதியூட்டலோ இன்றி பேச அழைப்பு!



ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வு ஒன்று மட்டுமே இத்தீவில் அவர்களுக்குரிய அரசியற் சமத்துவத்தை உறுதி செய்யும். 

அரசியற் சமத்துவம் உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே மீளப்பெறமுடியாத அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும். 

வரலாற்று ரீதியாகவும் வழிவழியாகவும் தொடர்தேர்ச்சியான தனித்துவமான நில நீர்த் தொடர்ச்சி கொண்ட பாரம்பரியத் தாயகம் ஈழத்தமிழ்த் தேசிய இனத்திற்கு உரித்தானது என்பது இந்தச் சமத்துவத்தின் மூலமாக உறுதிசெய்யப்படவேண்டும். 

அப்போது தான் திட்டமிட்ட அத்துமீறிய குடியேற்றங்கள் தாயகத்தைத் துண்டாடாமல் பாதுகாக்கமுடியும். 

அதாவது, ஈழத்தமிழர் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையும் அவர்களது தனித்துவமான இறைமையும் இவையிரண்டின் பாற்பட்டதான தாயகம் மீதான உரித்துக்கான அரசியல் அதிகாரம் பற்றியதே அரசியல் தீர்வு. 


ஈழத்தமிழர் தேசிய இனத்தைப் பொறுத்தவரை இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கம் அவர்களது அரசியல் விருப்பைப் புறக்கணித்து மட்டுமல்ல, அதற்கு முரணாகவே சோல்பரி (1947), குடியரசு (1972), ஜனாதிபதி ஆட்சியுடனான இரண்டாம் குடியரசு (1978) அரசியலமைப்புகளை ஜனநாயக ரீதியாக நிராகரித்துள்ளார்கள். 


குறிப்பாக, 1945 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சரவையில் சோல்பரி யாப்புக்கு ஒப்புதல் அளிக்கச் செய்வதற்காக டி. எஸ். சேனநாயக்க அரசியலமைப்பின் பிரிவு 29(2) இனைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் இருந்து தெரிவாகியிருந்த எட்டுத் தமிழ்ப் பிரதிநிதிகளை குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் நிலைக்கு இட்டுச்சென்றிருந்த போதும், 1947 பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் அதனை முழுமையாக நிராகரித்திருந்தனர். 


இதேபோன்ற ஒரு சூழல் தற்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஏற்படும் ஆபத்துக் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். 


வடக்கு கிழக்கில் தேர்தலில் தெரிவாகியுள்ள ஏழு தமிழ்ப் பிரதிநிதிகளும் தேசியப்பட்டியலில் ஒருவருமாக எட்டுப் பிரதிநிதிகள் தேசிய மக்கள் சக்தி சார்பாக வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையும், மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையைப் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் ஆளும் தரப்பு ஒருதலைப்பட்சமாக ஓர் அரசியலமைப்பை ஈழத்தமிழர் அரசியல் விருப்புக்கு எதிராகத் திணிக்கும் அபாயகரமான சூழல் தோன்றியுள்ளது. 


இந்தப் பேராபத்தில் இருந்து விடுபட ஈழத்தமிழர் குடிசார் சமூகமும் தமிழ்த் தேசியக் கோட்பாட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் சுயேட்சையுமாக பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிய பெரும்பான்மையாகக் காணப்பட்டாலும், இவர்களிடையே ஒருமைப்பட்ட நிலைப்பாடு இல்லாதுள்ளது. 


முதற்கட்டமாக இந்த பதினொரு பிரதிநிதிகளிடையே ஒன்றித்த நிலைப்பாடு உருவாக வேண்டும். அதன் விளைவாக ஆளும் தரப்பின் அரசியலமைப்புத் திணிப்புக்கு அதன் தரப்பில் தெரிவான எட்டுப் பிரதிநிதிகள் கூட சோல்பரி அரசியலமைப்பின் போது தமிழ்ப் பிரதிநிதிகள் இழைத்த வரலாற்றுத் தவறை இழைக்காத நிலை ஏற்படுத்தப்படவேண்டும். 


ஏற்கனவே தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ள முன்மொழிவிலும், தமிழ் மக்கள் பேரவை முன்வைத்துள்ள முன்மொழிவிலும் அடிப்படையான கோட்பாட்டு ரீதியான சிக்கல்கள் உள்ளதாக வாதப் பிரதிவாதங்கள் ஊடகப் பரப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுப்பப் பட்டுள்ளன.


'பிளக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கை' என்று தமிழ் மக்கள் பேரவையும், 'பிளக்கப்படாத, பிளக்கப்படமுடியாத இலங்கை' என்று தமிழரசுக் கட்சியும் அது கலந்து பேசி முன்வைக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய எனும் கலந்துரையாடற் பத்திரமும் முன்வைத்துள்ளன. 


அதேவேளை, கோட்பாட்டு ரீதியாக, வட்டுக்கோட்டைத் தீர்மானம், திம்பு என்றும், அண்மையில் திம்பு+ என்றும் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று என்ற புதிய குடிசார் அமைப்பு முன்வைத்துள்ள திருகோணமலைப் பிரகடனம் என்று கருத்துக்கு விடப்பட்டுள்ள முன்வரைவு என்றும் விவாதங்கள் உருவாகியுள்ள சூழலில், அரசியல் தீர்வு தொடர்பான கருத்தாடலுக்கான பொதுத் தளங்கள் அவசியமாகியுள்ளன.


அரசியல் தீர்வு தொடர்பாக யாழ் ஊடக அமையத்தால் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.


எந்தவித வெளிச்சக்திகளின் தலையீடோ, நிதியூட்டலோ இன்றி, முற்றிலும் சுயாதீனமான ஒரு தளத்தில் வடக்கு கிழக்கின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, குடிசார் சமூகப் பிரதிநிதிகளும் விவாதித்து ஒருமித்த முடிவுகளை எட்டும் சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும் என்று தேர்தலில் தெரிவாகியுள்ள அனைத்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொது அமைப்புகளையும் யாழ் ஊடக அமையம் வேண்டுகிறது

No comments