குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களே தம் மீதான குற்றத்தை விசாரிக்கும் நிலைமையை ஏற்க முடியாது - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூடு தொடர்பில் கஜேந்திரகுமார்
குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமை தான் இந்த நாட்டில் காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு அதனை நியாயப்படுத்த முடியாது.
வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டு , அவர்கள் கட்டளையை மீறி சென்றால் , வாகனத்தை நிறுத்த வைப்பதற்கான நடவடிக்கையை தான் பொலிஸார் மேற்கொள்ள முடியுமே தவிர சாரதியை சுட்டு கொல்ல முடியாது.
வாகனத்தில் மாட்டின் சாணகம் இருந்ததாக பொலிஸார் காண்பித்தமையை பார்த்த வேளை, அது கொண்டு வந்து கொட்டப்பட்டது போன்றே காணப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் , வாகனத்தில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் பொலித்தீன் பை ஒன்றில் சாணகம் காணப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பார்களா என்பதே சந்தேகமாக உள்ளது.
நாட்டில் அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளமையால் தான் இவ்வாறான செயல்களில் பொலிஸார் ஈடுபடுகிறனர். அவசர கால சட்டம் ஊடாக பொலிஸார் இராணுவத்தினருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகிறது. அதனூடாகவே கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் அவசர கால சட்டத்தின் ஊடாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு தம்மை பாதுகாத்தனர்
ஒரு குற்றவாளியாக இருந்தாலும் , பொலிஸார் சுட்டு கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும்.
ஆனால் எங்கள் நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களே தம் மீதான குற்றச்சாட்டை விசாரிக்கும் துரதிஷ்ட வசமான நிலைமைகள் காணப்படுகிறது. குற்றம் செய்ததாக கூறப்படும் பொலிஸாரே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

Post a Comment