வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்


யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதற்காக தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறித்து வருகின்றார்கள். 

இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனிடம் தொடர்புக்கொண்டு கேட்ட போது,

வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட பகுதிகளில் 15 கிராம சேவையாளர் பிரிவுகள் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும். 

அந்த நிலையில் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதி விடுக்கப்பட்டுள்ள நிலையில் ,  மற்றைய பகுதி விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அந்த நிலங்களில் இராணுவத்தினர் தோட்டங்களை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் விமான நிலையத்திற்கு மேற்கு பக்கம் உள்ள பகுதியில் பெருமளவான பனை மரங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டு , இராணுவத்தினர் தாம்  விவசாயம் செய்வதற்காக அந்த நிலங்களை தயார் படுத்தி வருகின்றனர்

பொதுமக்கள் தமது காணிகளில் உள்ள பனை மரங்களை அனுமதியின்றி தறித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டங்கள் அறவிடப்படும் நிலையில் , இராணுவத்தினரால் பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக பனை அபிவிருத்தி சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை தடுத்து நிறுத்தி பனை வளங்களை பாதுகாக்க வேண்டும். 

பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக மாவட்ட செயலர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோர் இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆட்சி மாற்றங்கள் ஊடாக தமது காணிகள் விடுவிக்கப்படும் என மக்கள் நம்பி தேசிய மக்கள் சக்தியினருக்கு வாக்களித்தனர். அதனாலயே அவர்களில் மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்கள் 

ஜனாதிபதி தைப்பொங்கல் நிகழ்வுக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த போது காணிகள் விடுவிக்கப்படும் , வீதிகள் திறக்கப்படும் என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் முகமாக ஜனாதிபதி யாழ்ப்பாண வருகை தந்த போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது சென்றார் 

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் , கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் , காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் , விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான வரைபடங்களை தாம் தயாரித்து வருவதாகவும் இராணுவத்தினர்  நீதிமன்றில் தெரிவித்துள்ள நிலையில் , தற்போது தாம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களின் காணிகளில் உள்ள பனை மரங்களை அழித்து வருகின்றனர். 

எனவே மக்களின் காணிகளில் உள்ள பனை மரங்களை பாதுகாக்க மாவட்ட செயலர் , பனை அபிவிருத்தி சங்க தலைவர் வடமாகாண ஆளுநர் ஆகியோர் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து , பனை மரங்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார். 

அதேவேளை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட செயலரை சந்தித்த போது , பொது மக்களின் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் , நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலையே , இராணுவத்தினர் தாம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தனியார் காணிகளில் நிற்கும் பனை மரங்களை தறித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments