யாழில். சுகாதார விதிமுறைகளை பேணாத உரிமையாளர்களுக்கு ஒரு இலட்சத்து 60ஆயிரம் தண்டம்
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை பேணாத உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவற்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன் போது, சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவகம் ஒன்றிற்கும், காலாவதி கடந்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டியமை, தூசு படிந்த நிலையில் உணவுப்பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டியமை மற்றும் எலி எச்சங்களுடன் உணவுப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, மனித நுகர்வுக்கு ஏற்றதல்லாத உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகளின் போது உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த மன்று, உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும் , பல்பொருள் அங்காடிகளில் உரிமையாளர்களுக்கு 40 ஆயிரம் , 10 ஆயிரம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
Post a Comment