தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் - சி.வீ.கே. காட்டம்
தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சிகளிடம் அமைப்புக்களிடம் கோரிக்கை முன்வைத்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.
இது தொடர்பில் தியாக தீபம் திலீபனுக்கு உதவியாகவும் அவருக்கு பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த ராஜன் உள்ளிட்ட மூத்த போராளிகள் பலரும் என்னை தொடர்பு கொண்டு இது தொடர்பில் அரசியல் கலப்பற்ற ஒரு கட்டமைப்பை உருவாக்குமாறு கேட்டுகொண்டனர்.
1988ம் ஆண்டு என்னுடைய செலவிலேயே தியாக தீபம் திலீபனுக்கான தூபி "தியாக தீப தூபி" என்ற பெயரில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அந்த தூபி எழு வருடங்களுக்கு பின்னர் 1995ம் ஆண்டு உடைக்கப்பட்டது. அதன் காரணமாக நான் சுடப்பட்டு வேலை இழந்து இந்திய அமைதிப்படை பாதுகாப்பு கைது என தடுக்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது தீபங்களுக்கு முன்பாக தலை குனிந்து நிற்பவர்கள் தம்மை தியாகிகளாக நினைக்கின்றனர். இதில் யார் யார் இராணுவ புலனாய்வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது எனக்கு தெரியும்.
திலீபனுடன் தொடர்பை கொண்டவன். தூபியை திரும்ப நிறுவியவன் என்ற அடிப்படையில் எனக்கு அதை பற்றி தெரியும்.
2002 சமாதான உடன்படிக்கையின்போது தூபி உடைக்கப்பட்டு 2003.8.25ம் திகதி மீள திறந்து வைக்கப்பட்டதுடன் அந்த தூபி யுத்தம் முடிந்த பிறகு 25.3.2010 அன்று உடைக்கப்பட்டது.
தற்போது அந்த உடைக்கப்பட்ட தூபியின் பூர்வீக அடித்தளத்திற்கை அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
வடக்கு மாகாண சபை இருந்த காலத்தில் நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தூபி தொடர்பில் கடிதம் எழுதினேன். அது பின்னர் சாத்தியப்படவில்லை.
யுத்தம் முடிந்த பிறகு முதன்முறையாக 2016ம் ஆண்டு தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை துப்பரவாக்கி நினைவேந்தலை செய்யுமாறு ஜனநாயக போராளிகள் கட்சியை நான் வலியுறுத்தினேன். அதன்படி அது நடந்தது. 2017ம் ஆண்டில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸிம் இணைந்து கொண்டனர்.
2018 இல் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நினைவிடத்தில் கொட்டில் போட்டு ஆதிக்கம் செலுத்தியபோது மாவை சேனாதிராஜாவை அழைத்து நான் சென்றபோது நாம் ஏளனமாக நடத்தப்பட்டடோம்.
தற்போது உள்ளவர்கள் வரலாற்றை திரிபு படுத்த கூடாது. திலீபன், எல்லாருக்கும் பொதுவானவன். அவன் கௌரவிக்கப்பட வேண்டியவன். மதிப்பளிக்கப்பட வேண்டியவன். போட்டி பொறாமையால் நினைவேந்தலை கொச்சைப்படுத்த கூடாது.
திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம். பொருத்தமான அரசியல் கலப்பற்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நினைவேந்தலிலும் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது. ஐந்து அல்லது ஏழு பேரை கொண்ட நினைவேந்தலுக்கான கட்டமைப்பை உருவாக்கி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை செய்ய வேண்டும். இதற்கு மக்கள் ஏகோபித்த ஆதரவை வழங்க வேண்டும் - என்றார்
Post a Comment