யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்னும் 19603 வீடுகளின் தேவைப்பாடுகள் உள்ளது - தீவக வீடுகளுக்கு அதிக நிதி தேவை
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்னும் 19603 வீடுகளின் தேவைப்பாடுகள் உள்ளது எனவும் , தீவக பகுதிகளில் வீட்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் வேளைகளில் , கட்டுமான பொருட்களை கடல் கடந்து எடுத்து செல்வதற்கு செலவீனம் அதிகமாக காணப்படுவதனால் , தீவக வீட்டு திட்ட நிதியினை அதிகரித்து வழங்க கடற்தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் கோரியுள்ளார்.
உலக குடியிருப்பு (World Habitat Day) தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகவும் , சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கருணாநாதன் இளங்குமரன் மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் டி. எல். டீபானி பிரியங்கா மற்றும் பிரதி திட்டப்பணிப்பாளர் பிரியங்கா செனிவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய போதே மாவட்ட செயலர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஒக்டோபர் 06 ஆம் தினம் உலக குடியிருப்பு தினத்தினை நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுடன் இணைந்து மாவட்டச் செயலகம் இந் நிகழ்வினை நடாத்திவருவதாகவும்,
அரசாங்கமானது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருவதற்கு அமைய வீடமைப்பு அமைச்சு இவ்வாண்டு 1259 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்னும் 19603 வீடுகளின் தேவைப்பாடுகள் உள்ளது.
அந்நிலையில் கடற்றொழி்ல் அமைச்சரின் சிபார்சுக்கு அமைய, அமைச்சரவையினால் 10 இலட்சம் பெறுமதியான வீடமைப்பு திட்டமானது 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 06 இலட்ச ரூபாய் பெறுமதியான வீடமைப்பு திட்டமானது 09 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 620 வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
அந்தவகையில் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய தீவுகளில் வீடமைப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது போக்குவரத்து செலவு அதிகமாகவுள்ளது, அதற்கான மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது.
ஆதலால் கடல் போக்குவரத்துக்கு ஏற்ப ஒதுக்கீட்டு தொகையினை அதிகரித்து வழங்குவதற்கு கடற்தொழில் அமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என மாவட்ட செயலர் கோரியுள்ளார்.
அதேவேளை இந்நிகழ்வில் பயனாளிகளுக்கான வீடமைப்புத் திட்டத்தினைபெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழ்களும், தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன.
Post a Comment