மாகாணசபையை ஆட்சி செய்தபோது மந்திரிமனையை மறந்திருந்தவர்கள் மாகாண தேர்தலுக்கு அழுகிறார்கள்! பனங்காட்டான்
கிடைக்கும் சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்தி தமிழரின் வரலாற்றுச் சின்னங்களை பேணிப்பாதுகாக்க அமைச்சர்கள் ஓடிவரும் நிலை தொடருமானால், மாகாண சபைக்கு தேர்தல் நடைபெறின் அதிலும் அவர்களின் கரங்களே பலமடையும் நிலை இலகுவாகும்.
தேர்தல் காலங்கள் போன்று தெற்கிலிருந்து அமைச்சர்கள் தமிழ்ப் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்வது இப்போது வாராந்த நிகழ்வாகியுள்ளது. அதற்கும் மேலாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வடக்கில் அநேகமாக தினமும் ஒரு நிகழ்விலாவது பங்குபற்றி வருகிறார். அவரோடு தேசிய மக்கள் சக்தியின் தமிழ் எம்.பிக்களும் கலந்து கொள்கிறார்கள்.
கறுப்புக் கொடி காட்டி, சிங்கக் கொடியை எரித்து அமைச்சர்களை தமிழர்கள் வரவேற்ற காலம் போய்விட்டது. 1958ல் பண்டாரநாயக்க அரசில் அமைச்சராகவிருந்த ஏ.பி.ஜெயசூரியாவின் யாழ்ப்பாண விஜயம் பிரபல்யமானது. அவர் பயணம் செய்த வாகனத்தின் முன்னால் வீதியில் சிங்கக்கொடியை எரித்த பல தமிழ் இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நையப்புடைக்கப்பட்டது 1961ம் ஆண்டு சத்தியாக்கிரகத்துக்கு முக்கியத்துவம் பெற்றுக்கொடுத்தது.
அந்தக் காலம் இப்போது முழுமையாக மாறிவிட்டது. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என்பவர்கள் கொழும்பிலிருந்து தரை வழியாக வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்து போகிறார்கள். ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திகளை தீர்மானிப்பவர்களாகவும், அரச நிர்வாகக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர்களாகவும் இன்றுள்ளனர்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலப்பகுதி எதிர்பாராத பல மாற்றங்களை கண்முன்னால் காட்டி நிற்கிறது. இலங்கைத் தமிழர்களின் தலைவர் யார் என்பது தெரியாமல் இருப்பதானது இந்த மாற்றங்களில் முக்கியமானது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு, முகம் காட்டாத இன்னொரு தரப்பினர் மறைந்திருந்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது, தமிழர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த பொதுவேட்பாளரை நிறுத்தியபோது அதனை தமிழ்த் தேசிய கட்சிகளே எதிர்த்தது என்பவை தமிழர்களுக்கு ஒரு தலைவர் இல்லையென்பதை பகிரங்கமாக எடுத்துக் காட்டிய சில.
ஜனாதிபதி தேர்தலில் அநுர குமர வெற்றி பெறுவாரென்று தமிழர் தரப்பில் எந்தவொரு அணியினரும் கற்பனை பண்ணிக்கூட பார்க்கவில்லை. தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தரப்பு தோல்வியைக் கண்டது. இதன் பலனாக வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலிருந்தும் அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவாகினர். இதுகூட தமிழ்த் தேசிய கட்சிகள் எதிர்பார்க்காததுதான். இறுதியில் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி விட்டு வைக்கவில்லை.
இப்போது மாகாண சபைத் தேர்தலை நோக்கி எம்மவர்கள் கோசம் எழுப்புகின்றனர். காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் இல்லாத இச்சபைகளின் கதிரைகளில் ஏறி அமர்வதற்கு ஏற்பட்டுள்ள பதவி ஆசையின் வெளிப்பாடு இது. 1987ல் ஜே.அர்.ஜெயவர்த்தனவும், ராஜிவ் காந்தியும் இணக்கத்துக்கு வந்த இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13ம் திருத்தமும், மாகாண சபை முறைமையும் அங்கீகாரம் பெற்றன. இதன் அடிப்படையில் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபைக்கான தேர்தல் 1988 நவம்பரில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்து ஜே.வி.பி. (அநுர குமரவின் தாய்க்கட்சி) 2006ல் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மூன்று மனுக்களின் அடிப்படையில் இணைப்பு ரத்துச் செய்யப்பட்டது.
அதற்குப் பின்னர் வடமாகாண சபைக்கு ஒரேயொரு முறை தேர்தல் நடைபெற்றது. இதற்கென கொழும்பிலிருந்து இறக்கப்பட்ட நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மொத்தம் 30 உறுப்பினர்களை இதில் பெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர அணி 7 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஓர் ஆசனத்தையும் பெற்றன. ஆறில் ஐந்துக்கும் மேலான வெற்றியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெற்றும் அதனால் ஆக்கபூர்வமான எதனையும் நிறைவேற்ற முடியவில்லை.
முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக சுமந்திரன் தலைமையிலான அணி முன்னெடுத்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மட்டுமே நினைவில் இருக்கக்கூடிய ஒரு சாதனை. அப்போது கட்சியின் தலைவராகவிருந்த இரா.சம்பந்தன் இதனை நிராகரித்ததால் சுமந்திரனின் முயற்சி கைகூடாது போனது என்றே கூற வேண்டும்.
இத்தனை விடயங்களையும் இப்போது மீண்டும் நினைவு கூருவதற்கான காரணம், அதே வடமாகாண சபையின் முதலமைச்சராக அடுத்த தேர்தலில் தாம் போட்டியிடவிருப்பதாக சுமந்திரன் தமது விருப்பத்தை தெரியப்படுத்தியிருப்பதும், இதற்காகவே மாகாண சபைத் தேர்தலை தாமதிக்காது நடத்த வேண்டுமென தமிழரசுக் கட்சி தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருவதும் இப்போது பேசுபொருளாக இருப்பதால்.
வடக்கு மாகாண சமைபயை சுட்டி சில விடயங்களை எழுதும்பொழுது, நெஞ்சில் முள் குத்துவது போன்ற வேதனையைத் தருவது நல்லூர் மந்திரிமனையின் இன்றைய நிலை. யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு தமிழ் மன்னர் அரசாட்சி புரிந்ததின் அடையாளமாக இருப்பவைகளில் முக்கியமானது இந்த மந்திரிமனை. பருத்தித்துறை வீதியில் நல்லூர் முத்திரைச் சந்திக்கும் சட்டநாதர் சுவாமி கோவிலுக்கும் இடையில் யமுனா வீதிக்கு முன்பாக இந்த மந்திரிமனை கட்டிடம் உள்ளது.
பராமரிப்பின்மையால் இடிந்து விழக்கூடிய நிலைமையில் பல காலமாக இந்தக் கட்டிடம் இருந்துள்ளது. கட்டிடத்தின் பல இடங்களில் வெடிப்புகள் காணப்பட்டன. கட்டிடத்தோடு சம்பந்தப்பட்ட பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. போர்க்கால குண்டுவீச்சுகள், விமானத் தாக்குதல்களால் இக்கட்டிடத்துக்கும் தாக்கம் ஏற்பட்டது.
தமிழர் தேசத்தின் பாரம்பரிய சின்னமாக பேணப்பட்டு வந்த மந்திரிமனையைச் சுற்றி இராச வீதி, இராணி வீதி, குமார வீதி, சங்கிலியன் வீதி, யமுனா வீதி, பண்டாரக்குளம் வீதி, இராச பாதை என்பன உள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபை தற்காலிகமாக அமைந்துள்ள பண்டார வளவும் இதற்கு அருகில்தான் உள்ளது.
யாழ்ப்பாண இராசதானியின் ஞாபகார்த்தமாக விளங்கும் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டிய சின்னமாக 2011ல் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. இந்தப் புராதன கட்டிடத்தை புனரமைக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொல்பொருள்துறைசார் அதிகாரிகள், உள்ளாட்சித்துறை ஆர்வலர்கள், பொதுத்தொண்டு நிறுவன பிரதிநிதிகளைக் கொண்ட குழுவும் இவ்விடயத்தில் ஆர்வம் காட்டியது. சிறுசிறு பாதுகாப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மந்திரிமனை அமைந்துள்ள காணி தனியார் ஒருவருக்குச் சொந்தமாக இருந்தமையால் அவரது அனுமதியின்றி எதனையும் தொடர முடியாத நிலையால் அனைத்தும் முடக்க நிலைக்கு வந்தன.
வடக்கு மாகாணத்தில் மாகாண சபை ஆட்சி நடைபெற்ற காலத்தில் இந்தக் கட்டிடத்தை ஏன் அவர்கள் கவனிக்கவில்லையென்ற கேள்வி பலரிடம் உள்ளது. 38 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் 30 உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியை தலைமையாகக் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளாக இருந்தும் இவ்விடயத்தில் அவர்கள் பாராமுகமாக ஏன் இருந்தனர் என்பது கூட பலர் மனதையும் குடைந்து கொண்டிருக்கிறது.
வடமாகாண சபையின் தலைவராகவிருந்தவர் உயர் நீதிமன்ற நீதியரசராகவிருந்த சி.வி.விக்கினேஸ்வரன். இப்பதவிக்கு வருவதற்கு முன்னர் பல மாவட்டங்களில் நீதிபதியாக இருந்ததோடு இலங்கை சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தவர். சங்கிலி மன்னன் ஆட்சியோடு சம்பந்தப்பட்ட மந்திரிமனை கட்டிடத்தை புனரமைக்க வேண்டியதன் அவசியத்தை ஏன் இவர் மறந்திருந்தார் என்பதுகூட பலருக்கும் புரியாதுள்ளது.
வடமாகாண சபை இயங்கிய காலத்திலிருந்து இன்றுவரை இதன் அக்கிராசனராகப் பதவி வகிப்பவர் திரு. சி.வி.கே.சிவஞானம். பல வருடங்கள் யாழ்ப்பாணம் மாநகரசபையின் நிர்வாகியாக, ஆணையாளராக, விசேட ஆணையாளராக பதவி வகித்தவர். மந்திரிமனை காணிக்கு முன்னால் ஒரு கூப்பிடு தூரத்தில் இவரது இல்லம் அமைந்துள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக வடமாகாண சபையை நிர்வகித்து வந்த தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவராக பதவி வகித்து வந்தவரும் இவரே.
தினமும் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே செல்லும்போது மந்திரிமனையை தரிசிக்காது இவரால் பயணித்திருக்க முடியாது. மாகாண சபையின் உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டு அக்கிராசனராக பதவி வகிக்கும் இவர்கூட மந்திரிமனை விடயத்தில் அக்கறை காட்டாதது பற்றி விசனம் கொள்ள வேண்டியுள்ளது. கடந்த வாரம் பொழிந்த பெருமழையால் இக்கட்டிடத்தின் ஒரு தொகுதி பாதிக்கப்பட்டதால் நல்லூர் இராசதானியை நினைவூட்டும் ஒரேயொரு மரபுரிமைச் சின்னமும் அழிந்து விடுமா என அக்கறையுள்ளவர்கள் கேட்கின்றனர்.
தையிட்டியிலும், குருந்தூர்மலையிலும், வெடுக்குநாறிமலையிலும், வெருகல்மலையிலும் பௌத்த வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்காக அக்காணிகளை அரசுடமையாக்க முடியுமென்றால், மந்திரிமனையைப் பாதுகாக்க அரசாங்கத்தினால் ஏன் நடவடிக்கை எடுக்க முடியாதென்று கேட்பதில் நியாயமுண்டு.
தமிழ் அரசியற் பரப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான சிவஞானம் சிறிதரன் மட்டுமே இதனை எழுதும்வரை மந்திரிமனை இருக்கும் இடத்தைச் சென்று பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நிலைமையை ஆராய்ந்துள்ளார். அநுர அரசின் தரப்பிலிருந்து அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரம், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர்
தொல்லியல் திணைக்கள உதவிப் பணிப்பாளருடன் மந்திரிமனையைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமென்று கூறியுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்கஇ சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி மந்திரிமனையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.
கிடைக்கும் சந்தர்ப்பத்தை முறையாகப் பயன்படுத்தி, தமிழரின் தேவைகளைக் கவனிக்கவென அமைச்சர்கள் ஓடிவரும் நிலைமை தொடருமானால், மாகாண சபைக்கு தேர்தல் நடைபெறின் அதிலும் அவர்களின் கரங்களே பலமடைவது இலகுவாகும்.
Post a Comment