எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும்
எல்லாவற்றையும் எதிர்ப்பது என்ற மக்களின் மனநிலையில் மாற்றம் வேண்டும். கிடைக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு பேரம் பேசி எமக்குத் தேவையானதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனூடாக எமது மாகாண மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வர்த்தக கைத்தொழில்துறை மன்றத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர்,
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு எமது மாகாணம் 4 சதவீதத்தையே பங்களிப்புச் செய்கின்றது. இதை 10 அல்லது அதைவிடக் கூடியளவு உயர்த்துவதற்குத் தேவையான வளம் எமது மாகாணத்தில் இருக்கின்றது. நாங்கள் எங்கள் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவில்லை.
பெறுமதி சேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவது மற்றும் ஏற்றுமதியை மேற்கொள்வது என்ற இரண்டு முறைமைகளின் ஊடாகவும் தேசிய உற்பத்திக்கான எங்களின் பங்களிப்பை பெருமளவு அதிகரித்துக் கொள்ள முடியும்.
எனக்கு முன்னர் உரையாற்றிய பேச்சாளர்கள் குறிப்பிட்டதைப்போன்று எமது மாகாணத்தில் அதிகளவான மக்கள் நெல் உற்பத்தியையே மேற்கொள்கின்றனர். அதை மாற்றியமைப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். போருக்கு முன்னர் இருந்த ஏற்று நீர்பாசனத் திட்டங்கள் பலவும் அழிவடைந்து விட்டன. இன்னமும் 21 ஏற்று நீர்பாசனத் திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படவில்லை. ஏற்று நீர்பாசனத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதன் ஊடாக மாற்றுப் பயிர் செய்கையை விவசாயிகளிடம் ஊக்குவிக்க முடியும்.
எமது மாகாண விவசாயிகள் திறமையானவர்கள். எந்தவொரு பயிர் வகையையும் வேண்டியளவில் உற்பத்தி செய்யக் கூடிய இயலுமை உடையவர்கள். ஆனால் விளைபொருட்களுக்கான விலைத் தளம்பல் அவர்களைப் பாதிக்கின்றது. நிலையான விலை கிடைக்குமாக இருந்தால் அவர்கள் இன்னமும் உற்சாகமாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுவார்கள். அதற்கு நான் முன்னரே குறிப்பிட்டதைப்போன்று பெறுமதி சேர் பொருட்களாக மாற்றுதல் மற்றும் ஏற்றுமதியை மேற்கொள்ள வேண்டும். இந்த அரங்கிலுள்ள தொழில்முனைவோர் அதைக் கவனத்திலெடுக்க வேண்டும்.
எமது விவசாயிகளில் சிலர் இன்னமும் பாரம்பரிய முறையிலேயே பயிர்ச்செய்கையை மேற்கொள்ள விரும்புகின்றனர். இன்று நவீன முறைகள் பல வந்துள்ளன. அதன் ஊடாக குறைந்த முதலீட்டில் அதிகளவு உற்பத்தியைப் பெற்றுக் கொள்ள முடியும். அதை நோக்கி அவர்கள் செல்லவேண்டும். அவர்களின் நடத்தைகளில் மாற்றம் தேவை.
எமது மக்கள் எல்லாவற்றையும் எதிர்ப்பு மனநிலையில் அணுகக் கூடாது. நான் யாழ். மாவட்டச் செயலராக இருந்த காலத்தில், கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. எமது மக்கள் அதனையும் எதிர்த்தார்கள். சுத்திகரிக்கப்பட்ட பின்னர் செறிவு கூடிய நீர் கடலுக்குச் செல்லும்போது மீன் வளம் அழிவடையும் என்றார்கள். ஆனால் இன்று அந்தப் பகுதியில் அதிகளவு மீன்கள் பிடிபடுவதாகக் கூறுகின்றார்கள். அதைப்போல பளையில் காற்றாலை அமைக்கப்பட்டபோது மழை வராது என்று சொன்னார்கள். ஆனால் இன்று அவ்வாறான நிலைமை இல்லை. எனவே எந்தவொரு விடயத்தையும் எதிர்ப்பது என்ற மனநிலையில் சிந்திக்காமல் அந்தத் திட்டங்கள் ஊடாக எங்களுக்கு என்ன நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற கோணத்தில் சிந்திக்கவேண்டும், என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் வர்த்தக மற்றும் தூதரக நிர்வாகத் தலைவர் ரம்யா சந்திரசேகரன், தேசிய தொழில் முயற்சி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர, பெஸ்ட் கப்பிடல் ஹோல்டிங்ஸ் நிறுவனத் தலைவர் ராஜேந்திரா தியாகராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Post a Comment