யாழில். வீட்டில் சொல்லாமல் வெளியே போன யுவதியை அடித்தே கொன்ற மாமன் - மாமன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்


வீட்டாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார் என யுவதி மீது பச்சை தென்னை மட்டையால் , தாய் மாமனார் தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி உயிரிழந்துள்ளார் என உடற்கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் , இருபாலை பகுதியை சேர்ந்த , பிரதீப் நிவேதா (வயது 24) எனும் யுவதி கடந்த 09ஆம் திகதி மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என வீட்டார் தெரிவித்து சடலத்தை யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்திருந்தனர். 

அந்நிலையில் , சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் ,  யுவதியின் உடலின் பல இடங்களில் கண்டல் காயங்கள் , உள்காயங்கள் காணப்பட்டுள்ளன. அத்துடன் , யுவதியின் மீதான தாக்குதலே உயிரிழப்புக்கு கரணம் கண்டறியப்பட்டது. 

அதனை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு , பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் , 

உயிரிழந்த யுவதி, தாய் மற்றும் தகப்பன் இல்லாத நிலையில் ,  சகோதரி குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 08ஆம் திகதி வீட்டில் யாருக்கும் சொல்லாது வெளியே சென்ற யுவதி இரவு வீடு திரும்பியுள்ளார். 

அது தொடர்பில் விசாரணை செய்து , யுவதியின் தாயின் தம்பியான தாய் மாமன் தென்னை மட்டையின் பச்சை மட்டையால் , மூர்க்கத்தனமாக யுவதியை தாக்கியுள்ளார். மட்டை பிய்ந்து தும்புகள் ஆகும் வரை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து அழுது கொண்டு படுத்த யுவதி மறுநாள் அதிகாலை மூச்சு விட சிரமப்பட்ட நிலையில், தூக்கத்தால் எழுந்து , மூச்சு விட சிரமப்பட்டுள்ளார் 

அதனை அடுத்து வீட்டார் நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து , காவு வண்டி வீட்டிற்கு வருவதற்கு முன்பே யுவதி உயிரிழந்தமையால் , நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் யுவதி உயிரிழந்து விட்டார் என கூறி சென்று இருந்தனர். 

அதன் பின்னர் வேறு வாகனத்தில் யுவதியின் சடலத்தை எடுத்து சென்று , யாழ் . போதனா வைத்தியசாலையில் வீட்டார் ஒப்படைத்தனர். 

அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உடற்கூற்று பரிசோதனை மேற்கொண்ட வேளையே யுவதி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் வெளி தெரியவந்துள்ளது. 

அதனை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து , யுவதியின் தாய் மாமனான , யாழ் . போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார தொழிலாளியை கைது செய்து , விசாரணைகளை மேற்கொண்ட பின்னர்  யாழ் .  நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை , தாய்மாமனை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

No comments