விஜயின் கூட்டத்தில் நெரிசல் - 40 பேர் உயிரிழப்பு


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்றைய தினம் சனிக்கிழமை கரூர் மாவட்டத்தில் மக்களைச் சந்தித்து உரையாற்றியபோது, கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 

விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது வேனுக்கு அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

அப்போதே கூட்டத்தில் இருந்த ஒரு பெண் மயக்கமடைந்தார். உடனடியாக அவர் அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜய் பேசி முடித்துவிட்டுப் புறப்பட்ட பிறகு, கூட்டம் கலைந்து செல்லும்போது பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

முதற்கட்டமாக 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்து வந்த தகவல்கள் மிகுந்த துயரத்தை அளித்தன. 

இரண்டாம் கட்டமாக, ஒரு பெண், 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

தற்போது, விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் மேலும் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.






No comments