ஈழம் சிவசேனை:பற்றிக் எதிராக களத்தில்!
வடக்கு மாகாண கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை இடமாற்ற வேண்டும் என கோரியும் ஈழம் சிவசேனை போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. நல்லூரில் அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக சிவசேனை அமைப்பினரால் இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
அதே சமயம் கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாத நிலையில் தெரசாவுக்கு மட்டுமே அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் இருந்து வாகனத்தில் வருகை தந்த குழு ஒன்று சிவசேனை அமைப்பின் போராட்டப் பந்தலுக்கு சென்று குழப்பம் விளைவித்தனர்.
இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதால் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட காவல்துறையினர்; குழப்பம் விளைவித்த நபர்களை விரட்டியிருந்தனர்.
இதனிடையே போராட்டத்தை அறிக்கையிட முனைந்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தபட்டுள்ளார். கிளிநொச்சியில் இருந்து வாகனத்தில் வருகை தரப்பினரே பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்தி விட்டு சென்றுள்ளனர்.
Post a Comment