கேப்பாப்புலவு காணிகளை விடுவியுங்கள்


முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் இராணுவத்தின் பிடியிலுள்ள மக்களுக்குரிய 190 ஏக்கர் காணிகளை விடுவிப்புச் செய்வதுடன், அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கேப்பாப்புலவு மக்களை உடனடியாக அவர்களின் பூர்வீக வாழிடங்களில் மீளக்குடியமர்த்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார் 

மேலும் தெரிவிக்கையில், 

“கேப்பாப்புலவு மக்கள் பாரிய போராட்டங்களை நடாத்தியதன் மூலமாக இராணுவத்தின் கையகப்படுத்தலில் இருந்த பெருமளவான மக்களின் காணிகள் கடந்தகாலங்களில் விடுவிக்கப்பட்டன.

ஆனால் தற்போதும் 190 ஏக்கர் அளவில் கேப்பாப்புலவு மக்களுடைய பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்படாமலுள்ளன. அந்தக் காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.

குறித்த கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கேட்டால் கூடிய விரைவில் விடுவிக்கப்படுமென தொடர்ந்து தெரிவித்துக்கொண்டிருக்கின்றார். 

அதேபோல் அமைச்சர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வரும்போது கேட்டால் அவர்களும் அதே பதிலையே கூறுகின்றனர். அதேபோல் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்கவிடமோ அல்லது வன்னி மாவட்ட அரசாங்கத்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ கேட்டால் அவர்களும் கூடிய விரைவில் கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படுமென தெரிவிக்கின்றனர்.

ஆனால் குறித்த கேப்பாப்புலவு காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் கேப்பாப்புலவை பூர்வீகமாகக் கொண்ட 60 குடும்பங்கள் அளவில் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அவல வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். கேப்பாப்புலவு மக்களுக்கு ஏன் இந்த அகதி எனும் அவல நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தயவுசெய்து கேப்பாப்புலவு மக்களை உடனடியாக அவர்களுடைய பூர்வீக வாழிடங்களில் மீள்குடியேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

No comments