வடமராட்சியில் மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் - கட்டுப்படுத்த இராணுவம் துணைக்கு தேவை என பொலிஸ் கோரிக்கை


பொலிஸ் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பொலிஸாரினால் சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியவில்லை என பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைவிரித்துள்ளார். 

வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ந. திரிலிங்கநாதன் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்றது.

இதன்போது வடமராட்சியில் அதிகரித்து வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பிலும், கற்கோவளம் பகுதியில் மணல் மாபியாக்களால் மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் கேள்வி எழுப்பினார்.

 இதற்கு, 'பொலிஸ் திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. ஆதலால், இந்த விடயத்தில் எதையும் எம்மால் செய்ய முடியாதுள்ளது. இராணுவத்தினர் அல்லது விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புக் கிடைக்கும் பட்சத்தில். இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தெரிவித்தார்.

இதன்போது, பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பொலிஸார் ஒருவர் சொந்தமாக டிப்பர் வாகனங்களை வைத்துக்கொண்டு வடமராட்சியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் ஒளிப்பட ஆதாரங்களுடன் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரால் சுட்டிக்காட்டப்பட்டது.

 இதையடுத்து, 'இந்த விடயம் தொடர்பில் கவனம் எடுக்கப்படும்' என பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க கூறினார்.


No comments